தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உட்பட பல பகுதிகளில் குறுவை சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர்.

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் ஒரு சில பகுதிகளில் ஒரு போக சம்பா சாகுடிக்காக விவசாயிகள் நாற்று நட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் குறுவை வயல்களில் களை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். காலை வேளையில் வெயில் அடித்தாலும் மாலையில் மழை பெய்கிறது. இதனால் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டுள்ளனர்.

பல இயற்கை இடர்பாடுகளை தாண்டி தங்கள் விளைவித்த நெல் பயிர்கள் நன்கு வளர்ந்து இருப்பதை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இருப்பினும் அறுவடை ஆக தயாராகி வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் சாய்ந்து விடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.





தஞ்சை அருகே 8.கரம்பை உட்பட சில பகுதிகளில் ஒரு போக சம்பா சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. 30 நாட்கள் மற்றும் 40 நாட்கள் நாற்றுக்களை நட்டுள்ள விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர். சில பகுதிகளில் சம்பா நாற்று நடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல்தான் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.

நடப்பாண்டு மேட்டூர் அணை வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. ராமநாதபுரம் ஊராட்சி, ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் நடந்துள்ளது.

ஆனால் குறுவை சாகுபடி மேற்கொள்ளாத எங்களை போன்ற சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி மேற் கொண்டு வருகிறோம். கடந்த சில நாட்களாக பெய்த மழையை பயன்படுத்தி வயலை உழுது 40 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை நடும் பணிகளில் உள்ளோம். சிலர் நாற்று நட்டு ஒரு வாரம் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதை பயன்படுத்தி ஒரு போக சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.