தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தென்காசி மாவட்டத்திற்கு சென்றார். குற்றாலத்தில் தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் உரையாடினார். பின்னர் சாலை மார்க்கமாக ஆழ்வார்குறிச்சிக்கு வருகை தந்தார். அங்கு பாரம்பரியமாக பானைகள் செய்யும் மண்பாண்ட தொழிலாளர்களிடம் உரையாடினார். அங்கு அவர்கள் தொழில் செய்யும் விதம் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாரம்பரிய தொழில் ஆர்வம் ஆகியவற்றை கேட்டறிந்தார். அவர்கள் அனைவரிடமும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் சந்தைப்படுத்துவதையும் கேட்டறிந்தார்.




அதன் பின்னர் சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரமம்-காந்தி கிராம் அறக்கட்டளையில் மாற்று திறன்களைக் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுடன் ஆளுநர் ரவி விரிவான உரையாடல்களை நடத்தினார். சமூக நலனுக்கான நிறுவனத்தின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.




தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள டைகர் ரிசார்ட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு விவசாயிகளிடம் உரையாடினார். தமிழில் உரையை தொடங்கிய கவர்னர், ”இந்த நாள் எனக்கு சந்தோஷமான நாள். இந்த இடம் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய இடம். வடக்கே காசி இருப்பது போல் தெற்கே தென்காசி உள்ளது. பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கிய மண். 11-ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்தவர் நமது பாரம்பரியத்தை அழித்த போது, அதே போன்று கட்டிடங்களை பராம்பரியத்துடன் தெற்கே உருவாக்கியவர் பராக்கிரம பாண்டியமன்னன்.




நான் ஒரு விவசாய குடும்பம் தான். 11-ம் மற்றும் 12ம் வகுப்பில் படிக்கும் காலத்தில் இருந்து விவசாய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுவருகிறேன். அதனால் எனக்கு விவசாயிகளை பார்க்கும் போது தனி மரியாதை மற்றும் பிடித்தம் தோன்றும். தன்னை உங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும், கவர்னராகவும் தான் தெரியும். விவசாய பணி என்பது கடினமானது. விவசாயிகளின் வாழ்க்கை என்பது அதிகமான மேடு பள்ளங்களை கொண்டது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற பலர் இயற்கை விவசாயம் செய்து வருவது பாராட்டத்தக்கது. இயற்கை விவசாயத்தின் மூலம் வேதிபொருட்கள் இல்லாத உடலுக்கு நன்மை பயக்ககூடிய உணவுப்பொருட்களை தாம் உற்பத்தி செய்யலாம். காலநிலை மாறுபாட்டின் காரணமாக பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் பல நாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்படும். நமது நாடு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் உலக்கத்திற்கே உதாரணமாக உள்ளது. உலகத்திற்கே எடுத்துகாட்டாக உள்ள நமது பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகளாகிய நீங்கள் தான்.




பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய லைஃப் என்ற திட்டம் ஐநா சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் நாம் வாழ்க்கையை எவ்வாறு நகர்த்துகிறோம்? இயற்கை சக்தியை எவ்வாறு உற்பத்தி செய்கிறோம், பயன்படுத்துகிறோம் என்பதையெல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த ஜி 20 மாநாட்டில் இந்த திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். அந்த திட்டத்தினை உலக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளார்கள் என்பது இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான வருடங்கள் நாம் விவசாயம் செய்து வருகிறோம். நமது நாட்டின் சொத்து விவசாயிகள் தான்.




இயற்கை விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். இயற்கை வேளாண்மை மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, சந்தைபடுத்துதல் முறையை நாம் தெளிவாக கற்று அதன்மூலம் விளைபொருட்களை விற்பனை செய்தால் கனிசமான லாபத்தை பெறமுடியும். வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த தனியாக சந்தை உருவாக்கப்படும். அந்த காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.




ஆழ்வார்குறிச்சியில் ஆளுநர் ரவி அவர்கள் சிவசைலபதி கோயிலில் சிவபெருமானை தரிசித்து அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் நல்வாழ்வு கிடைக்க வேண்டிக் கொண்டார்.