தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் களர், உவர் பாதிப்புகள் உள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.


இந்த நிலங்களில் உள்ள பிரச்சனைகளை தெளிவாக புரிந்து கொண்டு எவ்வாறு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும், விஞ்ஞான ரீதியிலான தொழில்நுட்பங்களை தெரிந்து சீர்திருத்தம் செய்து உற்பத்தியை பெருக்குவதோடு, புதிய நிலங்களையும் விவசாயத்திற்கு கொண்டுவரும் முயற்சியை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என வேளாண் துறையினர் ஆலோசனைகள் தெரிவித்துள்ளனர்.


உவர் களர் நிலங்களின் தன்மைகள்:


உவர் நிலம் உண்டாவதற்கான காரணம் சரியான வடிகால் வசதி இல்லாமை, பாசன நீரில் உள்ள உப்பும் மண்ணில் உப்பு தங்குவதற்கு காரணமாக உள்ளது. மேலும் கடலுக்கு அருகாமையில் உள்ள நிலங்களில் கடல் நீர் புகுவதாலும், கடல் காற்று தன்னுள் உப்பு நிறைந்த நீர் திவலைகளை கொண்டு வருவதாலும் நிலம் உவர் தன்மையை பெறுகிறது. இவை தவிர மேட்டுப்பாங்கான நிலத்திலிருந்து கரைந்த உப்புக்கள் பள்ளமான நிலத்தை அடைந்து வெளியேற வழி இன்றி பள்ளமான நிலங்களில் தங்கிவிடும்.


உப்பு நிலங்களை பிரித்து அறியும் முறை:


உப்பு நிலங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். இவற்றின் சரியான பாகுபாடு முறைகள் தெரிந்த பின்னர் தான் சீர்திருத்தம் செய்ய முடியும். இதற்கு மண் ஆய்வு செய்வது முக்கியம். உப்பின் மொத்த அளவையும், என்னென்ன உப்புக்கள் உள்ளன என்பதையும், மண்ணின் கார அமில நிலையையும், அயன மாற்றத்திற்கு உட்பட்ட அளவையும் அதில் உள்ள சோடியம் சதவிகிதத்தையும் ஆராய வேண்டும்.


உவர் மண்: இவ்வகை மண்ணில் உப்பின் அளவு 4.5 இசிக்கு மேலும், கார அமிலத்தன்மை 8.5க்கு குறைவாகவும் அயன மாற்று சோடியத்தின் அளவு 15 சதவீதத்திற்கு குறைவாகவும் இருக்கும்.


உவர்- களர் மண்: உப்பின் அளவு 4.5 இ.சி.க்கு அதிகமாகவும், கார அமிலத்தன்மை 8.5க்கு குறைவாகவும், அயனமாற்று சோடியம் 15க்கு அதிகமாகவும் இருக்கும்.


களர் மண்: உப்பின் அளவு 4.0 இ.சிக்கு குறைவாகவும், கார அமிலத்தன்மை 8.5க்கு அதிகமாகும் அயனமாற்று சோடியம் 15க்கு மேல் இருக்கும்.


உப்பு நிலங்களில் பயிர் எவ்வாறு பாதிக்கப்படுகிறது:


உவர் மண்ணிலும்,  உவர்- களர் மண்ணிலும் மிக அதிக அளவில் கரையும் உப்புக்கள் இருப்பதால் பயிர்களின் வேர்கள் நிலத்திலிருந்து நீரை எடுத்துக் கொள்வதில்லை. மேலும் வேரில் உள்ள நீர் வெளியேறுவதால் வேர்கள் காய்ந்து விடுகிறது. உவர் அல்லாத கலர் மண்ணில் களிக்கூட்டு கலவையில் சோடியம் அயனிகள் அதிக இடத்தை அடைத்துக் கொண்டு காற்று மற்றும் நீர் புகும் சக்தியை தடை செய்து விடுகிறது, இதனால் வேர்கள் சுவாசிக்க பிராணவாயு கிடைப்பதில்லை, இவ்வகை மண்ணில் சோடியம் கார்பனேட் எனும் காரப்பொருள் அதிகமாக உண்டாவதால் கார அமில அளவு 10க்கு மேல் கூடுவதால் பயிருக்கு வேண்டிய சத்துக்கள் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. மேலும் பை கார்பனேட் அயனிகள், போரான், மாலிப்டினம் பயிரின் தேவைக்கு அதிகமாக கிடைத்து நச்சுத்தன்மை ஏற்படுகிறது.


சீர்திருத்தும் முறை: உவர் நிலத்தில் நீரை தேக்கி வடிகட்டி உவர் தன்மையை குறைக்கலாம். உவர் களர் நிலத்தை அவ்வாறு சீர்திருத்த முடியாது. இவ்வகை மண்ணில் உப்பை தவிர களர் தன்மையுடைய சோடியம் அயனி அதிகம் இருப்பதால் உப்பை நீக்கிய உடன் அது உப்பில்லா களர் நிலமாக மாறி, நீரும் காற்றும் உட்புகாத, பயிர் செய்ய தகுதி ஆற்றதாகி விடுகிறது. எனவே களர் நீக்கம் செய்வதும் அவசியம். இதற்கு கால்சியம் அயனியை மண் மற்றும் நீர் கரைசலில் அதிகரிக்க வேண்டு.ம் இதற்கு தேவையான ஜிப்சத்தை மணலில் இட்டு உழவு செய்து பின்பு வடித்து விட வேண்டும்.


களர் உவர் நிலங்களை சீர் செய்யும் முறைகள்:


மண் பரிசோதனை செய்து களர் உவர் தன்மையை கணக்கிட்டு இட வேண்டிய ஜிப்சத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். உவர் தன்மை மட்டும் இருந்தால் ஜிப்சம் இட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக தக்கை, பூண்டு, சீமை அகத்தீ, சணப்பை போன்ற பசுந்தாள் பயிரை நெருக்கமாக விதைத்து பூக்கும் தருணத்தில் நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். திருச்சி 1, திருச்சி 2,  திருச்சி 3, திருச்சி 5, ஐஆர் 20, கோ 43, எம்டியு 7029 நெல் ரகங்களை பயிரிடலாம். களர் மண் அதிக மணற்பாங்காகவும், சுண்ணாம்பு கார்பனேட் கொண்டதாகவும் இருந்தால் ஜிப்சம் உபயோகிக்கக் கூடாது.


அதற்கு பதிலாக கந்தகத் தூளை பயன்படுத்த வேண்டும் இம்மாதிரியான சூழ்நிலையில் ஏக்கருக்கு தழை உரம் 2.5 மெட்ரிக் டன் அல்லது தொழு உரம் 5.0 டன் பயன்படுத்துவது சிறந்தது, கரும்பு ஆலை கழிவு ஏக்கருக்கு 1.5 மெட்ரிக் டன் இடலாம்.


நில சீர்திருத்தம் செய்த பின் செய்ய வேண்டியவை:


பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து அளவைவிட 25 சதம் கூடுதலாக இடுவதுடன் நான்காக பிரித்து இட வேண்டும். கடைசி உழவுக்கு பின் ஏக்கருக்கு 16 கிலோ சிங் சல்பேட் இட வேண்டும். குத்துக்கு 3 முதல் 5 நாற்றுக்களை நட வேண்டும். கேழ்வரகு, பருத்தி, கரும்பு, மிளகாய் மற்றும் கொத்தவரங்காய் ஆகிய பயிர்கள் களர் தன்மையை தாங்கி வளரக்கூடியது. களர் உவர் நிலங்களில் அடிக்கடி நீர் பாய்ச்சுதல், அதிக நீர் பாய்ச்சுதல் வேர்பாகங்களில் உப்பு தங்காமல் செய்தல் மூலம் கீழ் மட்டத்தில் உள்ள உப்புக்கள் மேல் மட்டத்திற்கு வருவதை தடை செய்ய முடியும்.




இவ்வகை மண்ணில் கோடையில் விவசாயம் செய்வதை தவிர்க்க வேண்டும். நெல்- பருத்தி, நெல்-பாசிப்பயிறு, நெல்-உளுந்து போன்ற பயிர் சுழற்சி முறைகளை கையாள வேண்டும். களர் மண்ணிற்கு சற்று கூடுதலான வயதுடன் குத்துக்கு 4 முதல் 6 நாற்றுகள் நட வேண்டும். அதிக தழை உரம் மற்றும் தொழு உரம் இடுவதுடன், அமோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட், பொட்டாசியம் சல்பேட் உரங்களையும், சிங் சல்பேட் உரத்தினையும் இட வேண்டும். எனவே களர் மற்றும் உவர் நிலங்களை சீர் செய்து நல்ல மகசூலை எடுக்க முடியும்