திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி மூலமாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 


திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு வருடம் தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது இந்த வருடம் மே 24ஆம் தேதியே திறக்கப்பட்டது. இதனை நம்பி திருவாரூர் மாவட்டம் முழுவதும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விவசாயிகள் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். இது கடந்த ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகமாகும். மேலும் விவசாயிகள் கடுமையான உரம் விலை ஏற்றம் போன்றவற்றின் காரணமாக ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்து இந்த குறுவை நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் தமிழக அரசு குறுவை நெற்பயிர்களை கொள்முதல் செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 306 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறந்தது குறிப்பிடத்தக்கது.




மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினால் ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டது. தற்போது திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை நெற்பயிர் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 306 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக இதுவரை குறுவை நெற்பயிர்கள் ஒரு லட்சத்து 66,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டை விட குறைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிற் சாகுபடி பணிகளில்  ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 




ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை நெற்பயிற் சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17% இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் கடந்த ஒரு மாதமாக திருவாரூர் மாவட்டத்தில் அடிக்கடி பெய்த கனமழையின் காரணமாக நெல்மணிகளின் ஈரப்பதம் என்பது அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.