இந்தியாவின் பிரதான தொழில் விவசாயம். விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருப்பது கால்நடைகள். கால்நடைகளில் முக்கியதுவம் வாய்ந்தது மாடுகள். மாடுகளில் பல வகை உண்டு இந்த பல வகையில் சிலவற்றை மட்டும் தான் மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் 36 வகை நாட்டு இன மாடுகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதே போன்று தமிழகத்தில் 16 வகையான நாட்டு இன மாடுகளுக்கு மட்டும் அங்கீகாரம் உள்ளது. இந்த 16 வகையில் ஒரு வகை மாடுதான் உம்பளச்சேரி மாடுகள். நாகை மாவட்டத்தில் உள்ள உம்பளச்சேரி கிராமம் தான் இதற்கு பூர்வீகம். சாதாரண மாடுகளை விட பன் மடங்கு பலசாலியான உம்பளசேரி மாடுகள் விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது. இந்த வகை மாடுகளை பராமரிப்பதற்கு என்று கால் நடைத்துறையால் 1968ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொற்கை கிராமத்தில் 496 ஏக்கரில் பண்ணை உருவாக்கப்பட்டது. அன்று முதல் உம்பளச்சேரி மாடுகளை பராமரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்தும் உற்பத்தி செய்யும் பால் விற்பனையும் செய்யப்படுகிறது.
இந்த கால்நடை குடிநீருக்காக 12 குளங்கள் உள்ளது. பிரத்தேகமாக பல ஏக்கரில் புல் வளர்க்கப்பட்டு தீவனமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உலர்ந்த வைக்கோலும் தீவனமாக கொடுக்கப்படுகிறது. சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட மாடுகள் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 400க்கும் குறைவான மாடுகளே உள்ளன. காரணம் இம்மாடுகளை பராமரிக்க போதுமான பணியாளர்கள் இல்லாதாதால் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்பினால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். மாடுகள் குறைந்ததற்கு காரணம் இது மட்டுமல்ல என்றும் குளங்களில் தண்ணிர் இல்லாததாலும் போதிய உலர்ந்த வைக்கோல் வைக்கப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே குளங்கள் அனைத்தையும் தூர்வாரி உரிய நேரத்தில் தீவனம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
இவை அனைத்திற்கும் மேலாக உம்பளச்சேரி மாடுகளுக்கு என்று அங்க அடையாளங்கள் பாரம்பரியம் உண்டு. ஆனால் தற்போது அந்த பாரம்பரியம் மறையும் வகையில் அங்க அடையாளம் இன்றி உம்பளச்சேரி மாடுகள் காணப்படுகின்றன. அந்த பாரம்பரியத்தை காக்கும் வகையில் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்பண்ணையில் வேளாண்துறை மாதிரி பண்ணை ஒன்று அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கால்நடை துறை துணை இயக்குனரிடம் கேட்டத்திற்கு, “கொற்கை கால்நடை பண்ணை குளங்கள் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஊழியர்கள் பற்றாக்குறையை அரசிடம் தெரிவித்து உற்ற நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண்துறை மாதிரி பண்ணை ஒன்று அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை குறித்தும் அரசிடம் தெரிவித்து உற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.