தஞ்சாவூர்: நிலக்கடலையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார் ‌. இதில் விவசாயிகள் பேசியதாவது:

திருவோணம் சிவ விடுதி கடலை விவசாயி ராமசாமி: திருவோணம் பகுதி சிவ விடுதி வெட்டி விடுதி உட்பட சுற்றுப்பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். நெல் பயிருக்கு மாற்றாக நிலக்கடலை சாகுபடி மட்டுமே இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் 37 கிலோ விதையை ஒரு 5 ஆயிரம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. ஆனால் விவசாயிகள் விளைவிக்கும் நிலக்கடலையை தனியார் வியாபாரிகள் 42 கிலோ நிலக்கடலை ரூ.2100 முதல் ரூ.2200 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். ஏன் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

நெல்லுக்கு மாற்றாக இப்பகுதிகளில் முழுமையாக நிலக்கடலை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. நெல்லுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறது. அதேபோல் நிலக்கடலையும் அரசை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்து பேசினார்.





இதற்கு அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

வாளமர்கோட்டை இளங்கோவன்: மேகதாது அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும் நிலை ஏற்படும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டம் நடத்துவது போல் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் தமிழக எல்லையில் போராட்டம் நடத்தும் நிலை உருவாகும். .

அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: அடுத்த தமிழக வேளாண் பட்ஜெட் வரை காத்திருக்காமல் நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஆம்பலாப்பட்டு தங்கவேல்: மழைக்காலத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததன் காரணம்.  எனவே பாசன கால்வாய், வடிகால் கால்வாய் ஆகியவற்றை நடப்பு பருவ காலத்திற்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூர்வாரி செப்பனிட்டு தர வேண்டும். குறிச்சிச்சேரி சுமார் 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஆகும். இதில் நீர் தேங்கினால் சுமார் 300 ஏக்கர் பாசனம் பெறும். இந்த ஏரியில் தடுப்பணை கட்டி கொடுத்தால் மேலும் 100 ஏக்கர் பாசனம் பெறும்.

கக்கரை சாமி. மனோகரன்: ஒரத்தநாடு பேரூராட்சி கழிவுகள் வன்னிப்பட்டு வாய்க்காலில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.