sugarcane procurement price: விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.340 ஆக உயர்வு:


குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் ஹரியானா எல்லையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில்,  கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “கரும்புக்கான நியாயமான மற்றும் சரியான விலையை உறுதி செய்வதற்காக, வரும் அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரையிலான காலக்கட்டத்தில் கரும்புப் பருவத்திற்கான விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகள், 2024-25ம் ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 விலையாக பெறலாம். முந்தைய ஆண்டு இந்த விலை ரூ.315 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.340 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது” என அனுராக் தாக்கூர் விளக்கமளித்துள்ளார். இதன் மூலம், 5 கோடி கரும்பு விவசாயிகள் பலன் அடைவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விவசாயிகள் போராட்டம்:


பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், ஹரியானா மற்றும் டெல்லியின் எல்லைகளுக்கு அருகே அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கடந்த வாரம், மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்கள் அரசு நிறுவனங்களால் குறைந்தபட்ச ஆதார விலையில் ஐந்தாண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை முன்மொழிந்தனர்.  ஆனால், விவசாயிகள் இந்த பரிந்துரையை மறுத்துவிட்டனர். இந்த நிலையில் தான் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


விண்வெளித்துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு:


இதனிடையே, நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளி துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கையில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது . இப்போது, ​​செயற்கைக்கோள் துணைத் துறையானது, ஒவ்வொரு துறையிலும் வெளிநாட்டு முதலீட்டிற்கான வரையறுக்கப்பட்ட வரம்புகளுடன் மூன்று வெவ்வேறு செயல்பாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, விண்வெளித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கொள்கையின் கீழ் தாராளமயமாக்கப்பட்ட நுழைவு வழிகள் விண்வெளியில் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.