தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் கோடை சாகுபடிக்கு நாற்று நடும் பணியில் விவசாயிகள் வெகு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்துள்ளார் மன்னன் கரிகாலச்சோழன்.
சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி என விவசாயிகள் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். முப்போகமும் நெல் விளைச்சல் பெறுவதால்தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும் தானிய சேமிப்பு கலன்கள் இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது. தற்போது சம்பா, தாளடி சாகுபடி முடிந்து விவசாயிகள் அறுவடைப்பணிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் கோடை சாகுபடிக்கு நாற்று விடும் பணிகளும் மும்முரம் அடைந்துள்ளது.
அந்த வகையில் தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள பஞ்சநதிக்கோட்டை, நடுவூர், செல்லம்பட்டி, தெக்கூர், வடக்கூர், பொய்யுண்டார் கோட்டை, ஆழிவாய்க்கால், நெல்லுபட்டு, காசவளநாடு புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா, தாளடி அறுவடை பணி முடிந்து விட்டது. இதை தொடர்ந்து விவசாயிகள் கோடை சாகுபடி செய்வதற்காக நாற்றங்கால் தயார் செய்தனர். தற்போது நாற்றங்காலில் பயிர்கள் முளைத்து பச்சை பசேல் என்று நாற்றுகள் பசுமையாக காட்சியளிக்கிறது.
இந்த நாற்றுகளுக்கு 30 நாள் வயதாகிறது. நாற்றங்காலில் இருந்து நாற்றை பறித்து வயல்களை நன்கு உழவு செய்து சேறாக்கி அடி உரம் இட்டு, நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுமோ? என்கிற அச்சமும் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது. பருவ மழை பொய்த்தால் கோடை சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். சம்பா, தாளடி அறுவடையை முடித்த விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் சில வயல்களில் நெற்பயிரை நடவு செய்யாமல் கோடைகால பயிரான உளுந்து, பயறு, எள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், சம்பா, தாளடி முடிந்துள்ள நிலையில் பம்ப் செட் வைத்துள்ள நாங்கள் கோடை சாகுபடியை மேற்கொண்டு வருகிறோம். சம்பா, தாளடி அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பனி குறைந்து வெயில் அடித்து வருவதால் நெல்லை காய வைத்து உடனுக்குடன் தூற்றப்படுகிறது. இன்னும் ஒரு சில பகுதிகளில் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. முன்கூட்டியே சாகுபடி பணிகள் மேற்கொண்டவர்கள் அறுவடையை முடித்துள்ளோம். தற்போது கோடை சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. கோடைகாலம் வந்துள்ளதால் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் கோடை சாகுபடி நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.