தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், கர்நாடகவிடம் உரிய தண்ணீரை பெற்று தரவும், மேகதாட்டு அணை கட்டுமான பணியை சட்டப்படி நிறுத்தவும், ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி, பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி ஜீன் 10-ம் தேதி பூம்புகாரில் தொடங்கினார். இந்த பேரணி பூம்புகார் முதல் மேட்டூர் அணை வரை சென்று நிறைவு பெறுகிறுது. தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர், நிமக்கல், சேலம் வழியாக நேற்றிரவு ஒகேனக்கல் வந்தடைந்தனர். 


இன்று காலை ஒகேனக்கல்லில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி தொடங்கியது.  இந்த பேரணியில்-100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, கர்நாடகவிடம் உரிய தண்ணீரை பெற்று தரவும், மேகேதாட்டு அணை கட்டுமான பணியை சட்டப்படி நிறுத்தவும், ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி முழகங்களை எழுப்பியவாறு பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்றனர். தொடர்ந்து இந்த பேரணி பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.


அப்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடுகின்ற விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட மோடியை, நீங்கள் இந்தியாவை ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்ற தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். மேகதாட்டில் அணை கட்டினால் அந்தப் பகுதியில் உள்ள கனகபுர மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும். அதனால் நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமாரின் தம்பி, ரவியை மக்கள் தோற்கடித்துள்ளனர். அதே போல தான் தமிழ்நாட்டிலும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல், விவசாயிகள் மீது வழக்கு தொடுத்து வரும் நிலையில் திராவிட மாடல் ஆட்சி செய்யும், டெல்டாவுக்கு சொந்தக்காரர் என கூறும் ஸ்டாலினுக்கும் அந்த நிலைமை வரும் என தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி ஆர் பாண்டியன், காவிரி டெல்டா, சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது, காவிரி நீர் தான்.  ஆனால் இன்று அது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. காவிரியில் உபரி நீரை தடுத்து ராசி மணலில் அணைக்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அணை கட்டுவதற்கு பெருந்தலைவர் காமராசர் திட்டங்களை தயார் செய்து அடிக்கல் நாட்டியுள்ளார். இங்கு அணை கட்டினால், உபரிநீரை அங்கு தேக்கி வைத்து, மேட்டூர் அணையின் மூலம் பாசனத்திற்கு திறக்க முடியும். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிரதமராக இருந்தபோது ராசி மணலில் அணை கட்டுவதற்கு, பிரதமராக இருந்த தேவேகவுடாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியது வரலாற்றில் இருக்கிறது. இதனால் ராசி மணலில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெங்களூரில் கர்நாடக அரசு ஆறுபில்லி கிராமத்தின் அருகே மேகேதாட்டிற்கு மேல் சிறியதாக தடுப்பணை கட்டியுள்ளது. இதனால் பெங்களூர் நகர் பகுதியில் பெய்கின்ற மழையின் போது வருகின்ற தண்ணீர், அங்கே தேக்க வைத்து, பயன்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளனர். மேலும் மழை இல்லாத காலங்களில், அந்த பகுதியில் கழிவு நீரை சேமித்து, அதனை காவிரியில் திறப்பதற்கான செயல் திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதை தமிழக அரசு ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பாக இந்த அணை கட்டப்பட்டு இருக்குமேயானால், அதனை இடித்து தள்ளுவதற்கு உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை தூர் வார அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டங்கள் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் 30 அடிக்கு மேல் மண், மணல் தேங்கி கிடக்கிறது. நம்மால் அந்த 30 அடிக்கு மேல் தான், தண்ணீர் தேக்கி வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை தூர் வாருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், அதற்கு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.