நடிகை பார்வதி பிறந்தநாள் - சுவாரஸ்ய தகவல்கள்!
‘பூ’ படத்தில் ‘சூச்சூ மாரி’யாக அறிமுகமாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஓமணப் பெண் நடிகை பார்வதி திருவோத்துவின் பிறந்த நாள் இன்று!
ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தென்னிந்தியா தாண்டியும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
1988ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பிறந்த பார்வதி, முதன்முதலில் தன் திரைப் பயணத்தைத் தொடங்கியது சின்னத்திரையில்.
டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, 2006ஆம் ஆண்டு ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
மரியான், அதனைத் தொடர்ந்து பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களையும் அனைத்து மொழிகளிலும் தன் 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் பார்வதி நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி உடன் புழு, இந்தியில் நடிகர் இர்ஃபான் கான் உடன் கரிப் கரிப் சிங்கிள் என பல மொழிகளின் முன்னணி நடிகர்களுடனும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பதில் பார்வதிக்கு நிகர் பார்வதியே
நடிப்பு தாண்டி புத்தகங்கள் வாசிப்பது, சமூக செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர் என வலம் வந்து பெண்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் பார்வதி.
தன் படங்களிலேயே தென்படும் இஸ்லாமிய வெறுப்பை சுய விமர்சனம் செய்வது தொடங்கி, இந்திய சினிமாவின் கல்ட் க்ளாசிக் படமாக உருவெடுத்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தை அப்படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் முகத்துக்கு எதிராகவே விமர்சித்தது வரை தன் கருத்துகளை எங்கும் எப்போதும் மிக அழுத்தமாக பார்வதி முன்வைத்து வந்துள்ளார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பார்வதி