Kalaignar Birthday | தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி! கலைஞரின் அரசியல் வல்லமை! 101வது பிறந்தநாள்

Continues below advertisement

மூச்சுள்ளவரை தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தியாக இருந்த, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கதர் சட்டை, கருப்பு நிற கண்ணாடி, மஞ்சள் துண்டு மற்றும் கரகர குரல் ஆகியவற்றை தனது அடையாளமாக்கி, ஒட்டுமொத்த தமிழக அரசியலின் அடையாளமாக நின்றவர் முத்துவேல் கருணாநிதி. தமிழ் மீதான தனது பற்றையும், அறிவையுமே தனக்கான ஆயுதமாக்கியதோடு, தான் சார்ந்த கட்சிக்கான செல்வமாகவும் மாற்றி திராவிட பேரியக்கமாக கட்டமைத்துள்ளார். அரைநூற்றாண்டு காலம் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத, தலைப்புச் செய்தியாக இருந்த கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வல்லமை பெற்றவர் கருணாநிதி. 10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லாவிட்டாலும், கட்டுக்கோப்புடன் கட்சியை வழிநடத்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தவர். 18 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றி, தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர் என்ற பெருமை பெற்றவர். தமிழர்களின் பல பிரச்னைகளுக்கு பேனா முனையை கொண்டு அனல் பறக்க எழுதிய கடிதங்கள் வாயிலாகவே தீர்வு கண்டு கண்டவர். மாநில அரசியல் என சுருங்கி விடாமல், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று மத்தியில் நிலையான ஆட்சி அமைய பங்காற்றியவர். அவர் கொண்டு வந்த பல தொலைநோக்கு திட்டங்கள் தான், இன்று தேசிய அளவில் முன்மாதிரியாக உள்ளன. எல்லாருக்கும், எல்லாமும் என அறைகூவலிட்டதோடு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்தவர். 

கருணாநிதிக்கு அரசியல் ஒரு கண் என்றால், தமிழ் மொழி அவரது மற்றொரு கண்ணாக உள்ளது. இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்களின் போது, தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தது தொடங்கி, கையொப்பத்தையும் தமிழிலே இட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தியவர். ஆட்சி கட்டிலில் அமைந்த பிறகும் தமிழ் மொழிக்கான தனது சேவையை நிறுத்தவில்லை.  தமிழில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கினார். அனைத்துப் பள்ளிகளிலும்  1 முதல் 10ம் வகுப்பு  வரை, தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றினார். திருக்குறளை மீட்டு திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலகங்கள் என அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றினார். தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இடங்களை ஒதுக்க உத்தரவிட்டவர். முழு முயற்சி மேற்கொண்டு தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்ததோடு, பிரமாண்ட மாநாட்டையும் நடத்தினார். இதுபோக இலக்கியங்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் பெரும் எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். இப்படி தமிழுக்கென கருணாநிதி ஆற்றிய தொண்டை பட்டியலிட்டால் அது மிக நீண்டதாகவே இருக்கும். 

கருணாநிதி எனும் பெரும் ஆளுமை வெற்றிகளால் மட்டுமே உருவாகிவிடவில்லை. தோள்விகளால் துவண்டுவிடாமல் அதிலிருந்து மீண்டு வந்ததன் மூலம் தான் தேசிய தலைவராக உருவெடுத்தார். தோல்விக்கு பிறகு மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர, அவருக்கு 13 ஆண்டுகள் ஆனாலும் தினந்தோறும் முரசொலியில் கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுத் உற்சாகப்படுத்தி வந்தார். மிசா காலத்தில் சிறையிலடைக்கப்பட்டதோடு, அவரது தலைமயிலான ஆட்சியும் கலைக்கப்பட்டது. ஊழல், குடும்ப ஆட்சி போன்ற குற்றச்சாட்டுகள் என பல்வேறு விதமான, எதிர்ப்புகள் மற்றும் சறுக்கல்கள் இருந்தாலுமே அனைத்தையும் கடந்து தன்னிகரற்ற தலைவராக கருணாநிதி திகழ்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram