Watch Video: டெக்சாஸில் ஸ்டார்பேஸில் உள்ள மெகாசில்லா எனப்படும் ஏவுதளக் கோபுரத்தின் ராட்சத உலோகக் கரங்களால் அந்த ராக்கெட் பிடிக்கப்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சோதனை:
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கேட்டின் எட்டாவது சோதனைப் பயணத்தை மேற்கொண்டது. நான்கு ஸ்டார்லிங்க் சிமுலேட்டர்களைப் பயன்படுத்துவதையும், செயற்கைகோளை விண்ணில் செலுத்திய பிறகு ராக்கெட் மீண்டும் பூமிக்கே திரும்புவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தப் பணி, ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் அமைப்பின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
அசத்திய ஸ்பேஸ்எக்ஸ் - வைரலாகும் வீடியோ
டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திட்டமிட்ட உயரத்தை அடைந்த பிறகு ராக்கெட்டானது மீண்டும் பூமியை நோக்கி அதிவேகமாக சீறி வந்தது. கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த பணியாளர்கள், அதனை திறம்பட கையாண்டு வெற்றிகரமாக தரையிறக்கினர்.
அதன்படி, பூமியை நோக்கி வந்தபோது குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், ராக்கெட்டின் இக்னீசியன் இன்ஜின் எரியூட்டப்பட்டு அதன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சீரான வேகத்தில் இயக்கப்பட்டு மெகாசில்லா எனப்படும் ஏவுதளக் கோபுரத்தை நோக்கி நகர்த்தப்பட்டது. அப்போது, அந்த கோபுரத்தில் இருந்த ராட்சத உலோகக் கரங்கள் ராக்கெட்டை வெற்றிகரமாக பிடித்து தாங்கி நின்றது. இந்த வெற்றிகரமான பிடிப்பு, ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் திட்டத்தின் முக்கிய இலக்கான, முழு மறுபயன்பாட்டை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.
நேரலையில் கண்டுகளித்த மக்கள்:
இந்த சோதனையானது ஸ்பேஸ்எக்ஸின் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனால் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அந்த வரலாற்று நிகழ்வைக் காண முடிந்தது. பூஸ்டர் கேட்ச் மூலம் ஸ்டார்ஷிப் விமானம் 8 இன் வெற்றி, நிலவில் நிரந்தர மனித இருப்பை நிறுவுதல் மற்றும் இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புதல் என்ற அதன் இலக்கை நோக்கி SpaceX ஐ உந்தியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி தொழில்நுட்பத்தின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், ஸ்டார்ஷிப் திட்டத்தின் அடுத்த மைல்கற்களை உலகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.