தெலங்கானாவில் நவராத்திரி பண்டிகையைக் கொண்டாட வந்த தனது மருமகனுக்கு, மாமியார் ஒருவர் 100 வகையான உணவுகளைச் சமைத்து விருந்தளித்ததோடு, ஒரு பவுன் தங்க நகையையும் பரிசாக அளித்து அசத்தியுள்ளார். தெலங்கானாவின் வணபர்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

Continues below advertisement


முதல் நவராத்திரி பண்டிகை


திருமணத்திற்குப் பிறகு வந்த முதல் நவராத்திரி பண்டிகை என்பதால், பெண் வீட்டார், மருமகனுக்கு இந்தச் சிறப்பான கவனிப்பை அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மாமியார் குட்டா சஹானா, தனது மருமகனுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் செயல் மருமகன் மீதுள்ள அன்பையும், புதிய உறவை வரவேற்கும் விதத்தையும் வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


விருந்தோம்பலுக்கு எப்போதும் முக்கியத்துவம்


இந்திய கலாச்சாரத்தில் விருந்தோம்பலுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் உறவினர்கள் கூடி உணவு பரிமாறிக் கொள்வதும், பரிசுகள் அளிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், 100 வகையான உணவுகளுடன் ஒரு பவுன் தங்க நகையையும் அளித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தங்கத்தின் விலை மளமளவென ஏறி ஒரு பவுன் லட்சம் ரூபாயை எட்டும் சூழலில், நகையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 60 வகையான இனிப்புகள், 30 வகையான காய்கறிகள், 10 வகையான உணவு வகைகள் இதில் பரிமாறப்பட்டு உள்ளன. 


இது போன்ற நிகழ்வுகள் இந்திய பாரம்பரியத்தின் தனிச்சிறப்பை வெளிப்படுத்துவதோடு, குடும்ப உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.