Wolfdog: உலகின் முதல் ஓநாய் நாயானது, பாதி ஓநாயாகவும், மீதி நாயாகவும் உருவத்தை கொண்டுள்ளது.
உலகின் முதல் ஓநாய் நாய்:
பெங்களூரைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர், கேடபாம்ப் ஒகாமி என்ற அரிய வகை ஓநாய் நாயை ( பாதி ஓநாய் மற்றும் பாதி நாய்) வாங்க 5.7 மில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ. 50 கோடி) செலவிட்டுள்ளார். உலகின் மிக அரிதான நாய் என்று கூறப்படும் ஒகாமி, உண்மையான ஓநாய்க்கும் காகசியன் ஷெப்பர்டுக்கும் இடையிலான முதல் கலப்பினமாகக் கருதப்படுகிறது. இது காண்போரை ஆச்சரியத்துடன் சேர்ந்து பிரமிக்க வைக்கவும் செய்கிறது.
காட்சிப்படுத்தப்பட்ட அரிய வகை நாய்:
பெங்களூருவைச் சேர்ந்த 51 வயதான எஸ். சதீஷ் பிரபலமான விலங்கு ஆர்வலராவார். இவர் 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாய் இனங்களை சேர்ந்த விலங்குகளை வைத்திருக்கிறார். தனது தனித்துவமான நாய் சேகரிப்பை ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்குக் காண்பிப்பதன் மூலம், தற்போது 30 நிமிடங்களுக்கு £2,200 (ரூ. 2 லட்சம்) முதல் ஐந்து மணி நேரத்திற்கு £9,000 (ரூ.8.50 லட்சம்) வரை சம்பாதிக்கிறார். இந்நிலையில் தனியார் நாய் கண்காட்சியில் அவர் வசமுள்ள கேடபாம்ப் ஒகாமி நாயை காட்சிப்படுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சதிஷ், "இந்த நாய்கள் அரிதானவை என்பதால் நான் அவற்றை வாங்குவதற்காக பணம் செலவிட்டேன். மேலும், மக்கள் எப்போதும் அவற்றைப் பார்க்க ஆர்வமாக இருப்பதால் எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது," என்று தெரிவித்தார்.
ரூ.50 கோடி விலை
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதீஷ், "இது மிகவும் அரிதான நாய் இனம், ஓநாய் போலவே தோற்றமளிக்கிறது. இந்த இனம் இதற்கு முன்பு உலகில் விற்கப்படவில்லை" என்றார். "இந்த நாய் அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது, இது அசாதாரணமானது. நாய்கள் மீது எனக்குப் பிரியம், தனித்துவமான நாய்களை சொந்தமாக வைத்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த விரும்புவதால், இந்த நாய்க்குட்டியை வாங்க 50 கோடி ரூபாய் செலவிட்டேன்" என்றார்.
முன்னதாக இவர் கடந்த ஆண்டு சுமார் 27 கோடி ரூபாய் செலவிட்டு மிகவும் அரிதான சௌ சௌ எனும் நாயை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. தனது செல்லப்பிராணிகளுக்கு என 7 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணையையே அவர் உருவாக்கியுள்ளார். ஆறு பராமரிப்பாளர்களும் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
பிரம்மிக்க செய்யும் ”கேடபாம்ப் ஒகாமி ”
உலகின் மிக அரிதான நாய் என்று கூறப்படும் இந்த நாய்க்குட்டி அமெரிக்காவில் பிறந்து பிப்ரவரியில் இந்தியாவில் ஒரு தரகர் மூலம் விற்கப்பட்டது. வெறும் எட்டு மாத வயதிலேயே, ஒகாமி 5 கிலோ எடையும் 30 அங்குல உயரமும் கொண்டுள்ளது. வலுவான புரோட்டின் டயட்டை மேற்கொள்ளும் ஒகாமி, நாளொன்றிற்கு 3 கிலோ பச்சை இறைச்சி உண்பதாக கூறப்படுகிறது. நாய் மற்றும் ஓநாயின் பாதுகாப்பு திறன் கொண்டு சிறந்த பாதுகாவலனாக இந்த ஓநாய் நாய் விளங்குவதாக கூறப்படுகிறது.
வலுவான தசை அமைப்பு மற்றும் பஞ்சுபோன்ற மேற்புறத்திற்கு பெயர் பெற்ற காகசியன் ஷெப்பர்ட் நாய்கள், ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள் போன்ற குளிர் நாடுகளிலிருந்து வருகின்றன. இந்த நாய்கள் விதிவிலக்கான காவல் நாய்களாகக் கொண்டாடப்படுகின்றன. பெரும்பாலும் மலைப்பகுதிகளில் ஓநாய்களிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாக்கப் பயன்படுகின்றன. கர்நாடகாவில் ஒகாமி ஏற்கனவே முத்திரையைப் பதித்துள்ளது. திரைப்படத்தின் பிரீமியர் காட்சிகள் உட்பட பல உயர்மட்ட நிகழ்வுகளில் இந்த நாய் பங்கேற்றுள்ளது.