பொதுவான மழை, ஆலங்கட்டி மழை, அமில மழை, மீன் மழை கேள்விப்பட்டு இருப்பீர்கள். மனித மல மழை கேள்விப்பட்டு இருப்பீர்களா? சீனாவில்தான் இப்படியான வயிற்றைப் புரட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


இதுகுறித்து வெளியான தகவலின்படி, தெற்கு சீனாவின் நேனிங் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட கழிவுநீர்க் குழாயை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழுத்த சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அழுத்தம் தாங்காமல் குழாய் திடீரென வெடித்தது. இதனால் மனிதர்களின் மலம், திரவ வடிவில் சுமார் 33 அடி உயரத்துக்கு வானை நோக்கிச் சீறியது. தொடர்ந்து புவி ஈர்ப்பு விசையின் காரணமாக கீழே அதே வேகத்தில் திரும்பியது.


மனிதர்கள் மீதும் வாகனங்கள் மீதும் விழுந்த கழிவுகள்


கீழே சாலையில் பயணித்த இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் மீது மலக் கழிவுகள் விழுந்தன. பாதசாரிகள் மீதும் பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. எனினும் திடீரென கழிவுநீர்க் குழாய் அழுத்தத்துடன் வெடித்து, மலம் கொட்டியதால், நிறைய வண்டிகள் சேதம் அடைந்தன. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், மலக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.






கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


முகம் சுளிக்க வைத்த காட்சிகள்


அந்த வீடியோவில் சீறிப் பாயும் மல மழையும், கார் ஒன்றின் முன்பக்கக் கண்ணாடி மீது மலத் துண்டுகள் விழும் காட்சி, காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளன.