நாடாளுமன்ற அவைக்குள் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெளியே நிருபர்கள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் பின்புறம் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 4 முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் வழக்கம்போல இருஅவைகளும் தொடங்கி நடைபெற்றது. 


அப்போது திடீரென மக்களவைக்குள் 2 பேர் நுழைந்தனர். அப்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து முதலில் இளைஞர் ஒருவர் குதித்தார். அவர் தவறி விழுந்து விட்டதாகவே பலரும் நினைத்தனர். அவரின் பின்னால் இன்னொருவரும் குதித்ததால் என்ன நடக்கிறது என்பது யாராலும் சில நிமிடங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் மருந்தை கையில் வைத்துக் கொண்டு சபாநாயகர் இருக்கையை நோக்கி எம்.பி.,க்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி வேகமாக சென்றனர். அவர்கள் இருவரையும் அங்கிருந்த எம்.பி.,க்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 


அவைக்குள் நுழைந்தவர்கள் கர்நாடகா மாநிலம் மைசூர் - குடகு நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் பேரில் பாஸ் பெற்று மக்களவைக்குள் சென்றதாகவும் கூறப்படுகிறது. 






அதேசமயம் நாடாளுமன்ற வெளியேயும் பெண்கள் இருவர் நிறங்களை வெளியேற்றும் புகை குண்டுகளை வீசினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் ஏற்கனவே சில போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர் என சொல்லப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள்  வீடுகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.


இப்படியான நிலையில் நாடாளுமன்ற வளாகம் வெளியே கிடந்த வெடிமருந்து குப்பியை வைத்து பத்திரிக்கையாளர்கள் உள்ளே என்ன நடந்தது என்பதை விளக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த குப்பியை பறிப்பதில் சில பத்திரிக்கையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் அந்த குப்பியை பறிக்க பெண் நிருபர் உட்பட இருவர் வந்ததால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பானது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் சரமாரியாக இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களை விமர்சித்து வருகின்றனர்.