CM Siddaramaiah: பொதுமேடையில் காவல்துறை அதிகாரியை அடிக்க கை ஓங்கிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
வீடியோ வைரல்:
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெலகாவியில் நடந்த காங்கிரஸ் பேரணியின் போது ஒரு போலீஸ் அதிகாரியை அடிக்க முற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பெலகாவியில் நடந்த கூட்டத்தில் பாஜகவினர் அரசுக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதால், பொறுமையை இழந்த முதலமைச்சர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை அடிக்க முயன்றுள்ளார்.
நடந்தது என்ன?
வைரலாகும் வீடியோவில், “காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ்ந்திருந்த மேடையில் நின்றிருந்த சித்தராமையா, அதிகாரியை அழைக்கிறார். கடும் கோபத்தில் இருந்த முதலமைச்சர், பேரணி நடைபெறும் இடத்திற்குள் மக்கள் எப்படி எதிர்ப்புத் தெரிவிக்கவும், கருப்புக் கொடிகளை அசைக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கேட்டார். "ஏய், இங்கே வா, எஸ்பி யார்? நீங்க என்ன பண்றீங்க?" என மைக்கை அணைப்பதற்கு முன்பு அவர் கூறியதை அனைவரும் கேட்டனர். தொடர்ந்து, தார்வாட் கூடுதல் எஸ்பி நாராயண பரமானியை நோக்கி, அடிப்பதற்காக சித்தராமையா தனது கையை உயர்த்தினார். இதைகண்டதும் அந்த போலீஸ் அதிகாரி வேகமாக பின்வாங்கினார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட சித்தராமையா ஓங்கிய கையை கீழே இறக்கிய” காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
காவல்துறை அதிகாரியை அடிக்க ஓங்கிய சித்தராமையாவின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதன்படி, "அதிகாரம் நிரந்தரமானது அல்ல. காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள்" என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது எக்ஸ் தளத்தில் எச்சரித்துள்ளது.
மன்னிப்பு கேட்க கோரிக்கை:
சம்பவம் தொடர்பாக பேசிய கர்நாடகா பாஜக செய்தி தொடர்பாளர் விஜய் பிரசாத், “காவல்துறை அதிகாரிக்கு எதிராக உங்கள் கையை உயர்த்திய செயல் மிக உயர்ந்த உங்களது பதவிக்கு அவமானகரமானது. உங்கள் ஆணவம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. நீங்கள் நிலைநிறுத்துவதாக சத்தியம் செய்த அமைப்புகளை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத வெளிப்பாடு இது. நீங்கள் அவமானப்படுத்த முயன்ற அதிகாரியிடம் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
சிவக்குமார் எச்சரிக்கை
காங்கிரஸ் நிகழ்ச்சியில் பாஜகவினர் கருப்புக் கொடி காட்டியது தொடர்பாக பேசிய துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், நான் உங்களை (பாஜக) எச்சரிக்கிறேன். நீங்கள் நிலைமையை சரிசெய்ய வேண்டும், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக உங்கள் கட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் உங்களுடைய எந்த நிகழ்வும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். எந்த வகையான போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.