ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாட்டுக்கு யானை ஒன்று அசத்தல் நடனம் ஆடியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக “ஜெயிலர்” படம் வெளியானது. இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, சுனில் குமார் என பலரும் நடித்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கிட்டதட்ட ரூ.600 கோடிக்கும் மேலாக வசூல் செய்த ஜெயிலர் படம் கடந்தாண்டு அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடிகை தமன்னாவின் அசத்தல் நடனத்தில் “காவாலா” பாடல் இடம்பெற்றது.
இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதிய நிலையில் ஷில்பா ராவ் பாடியிருந்தார். இப்பாடல் யூட்யூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்றது. காவாலா பாட்டு ரிலீசான அன்று அந்த பாடலே புரியவில்லை என்றெல்லாம் கமெண்டுகள் பறந்தது. ஆனால் அதற்கடுத்த நாளில் இருந்து பட்டித்தொட்டியெங்கும் ஹிட் என்பதைப் போல காவாலா பாட்டு அனைவராலும் முணுமுணுக்கப்பட்டது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் சிம்ரன் தொடங்கி பல நடிகைகள் வரை முகத்தை மாற்றி டான்ஸ் ஆடுவது போல வீடியோ வெளியிட்டனர்.
நடிகை தமன்னா எங்கு சென்றாலும் அந்த பாடலை ஆட சொல்லி ரசிகர்கள் கேட்டனர். தமன்னாவே இந்த பாடல் இந்தளவுக்கு பிரபலமாகும் என நினைத்திருக்க மாட்டார். மிகப்பெரிய வெற்றியை காவாலா பாடல் பெற்ற நிலையில் கேரளாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் யானை ஒன்று சரியாக காவாலா பாட்டின் நடன அசைவுகளை வெளிப்படுத்தியிருந்தது.
அது எப்படி திமிங்கலம் என பலரும் யோசித்த நிலையில், பொம்மை யானைக்குள் சிலர் நின்று கொண்டு நடனம் ஆடியது தெரிய வந்தது. சரியாக தமன்னாவின் நடன அசைவுகளை போட்டவுடனே பலரும் கண்டுபிடித்து விட்டனர். யானை நடனம் என்றால் அது தலையை மிக வேகமாக ஆட்டி தான் நடனம் ஆடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருந்தாலும் இந்த பொம்மை யானை நடனம் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.