Watch Video: பீகாரில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
நகைக்கடையில் கொள்ளை
பீகாரின் அர்ராவில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் திங்கட்கிழமை, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்தது. அர்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கோபாலி சௌக் கிளையில் நடந்த இந்த கொள்ளை, ஷோரூமின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
துப்பாக்கி முனையில் சம்பவம்:
வைரலாகும் வீடியோவில் , “கடையின் ஊழியர்களை ஒரு மூளையில் கைகளை தூக்கியபடி நிற்கச் செய்து துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி சில கொள்ளையர்கள் நின்றுள்ளனர். அதேநேரம், மீதமுள்ளவர்கள் பைகளில் நகைகள் மற்றும் பணத்தை நிரப்பியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி முட்டி போடச் செய்ததோடு, சிறுது நேரம் கழித்து கடையின் மறுமூளைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் இருவர் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் கொண்டு முகத்தை மறைத்து இருந்தாலும், பெரும்பாலானோர் முகத்தை கூட மறைக்காமல் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதும்” சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
நடந்தது என்ன?
எட்டு முதல் ஒன்பது பேர் கொண்ட ஆயுதமேந்திய கொள்ளையர்கள் பாதுகாவலர்களை மீறி, உள்ளே நுழைந்து முதலில் ஊழியர்களைத் தாக்கியதாக ஷோரூம் மேலாளர் குமார் மிருத்யுஞ்சய் தெரிவித்தார். மேலும், “ரூ. 25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, அதில் செயின்கள், நெக்லஸ், வளையல்கள் மற்றும் சில வைரங்கள் அடங்கும். இது அதிகாரிகளின் தவறு. இது காலை நேரம், மாலை அல்லது இரவு நேரம் அல்ல. நாங்கள் காவல்துறைக்கு போன் செய்தோம், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்கள் நிர்வாகிகள் இருவர் காயமடைந்துள்ளனர், அவர்கள் தலையில் ரிவால்வரால் தாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறை மீது குற்றச்சாட்டு:
சம்பவம் தொடர்பாக பேசும் தாக்கப்பட்ட காவலர் மனோஜ் குமார், “குற்றவாளிகள் ஒரு காரில் வந்து தெருவின் குறுக்கே நிறுத்தினர். ஷோரூம் கொள்கையின்படி, நான்கு பேருக்கு மேல் உள்ள குழுவை ஒரே நேரத்தில் உள்ளே நுழைய நாங்கள் அனுமதிப்பதில்லை. அதன்படி அவர்களை ஜோடிகளாக உள்ளே நுழைய அனுமதித்தோம். ஆறாவதாக வந்த நபர், என் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து என் ஆயுதத்தைப் பறித்து, என்னைத் தாக்கினார். பின்னர், அவர்கள் தங்கள் பைகளில் நகைகளை நிரப்பத் தொடங்கினர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ஊழியர் பேசுகையில், “ஷோரூமுக்குள் 8-9 ஆயுதமேந்திய குற்றவாளிகள் இருந்தனர். நாங்கள் போலீஸை அழைத்தபோது, அவர்கள் இன்னும் உள்ளேயே இருந்தனர். போலீசார் சரியான நேரத்தில் வந்திருந்தால், கொள்ளையர்கள் பிடிபட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டே இருந்தனர். அவர்கள் வந்தடைவதற்குள், குற்றவாளிகள் ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டனர்” என குற்றம்சாட்டினார்.
துப்பாக்கிச் சூடு:
இதனிடையே, ரகசிய தகவலின் பேரில், காவல்துறை அதிகாரிகள் பாபுரா சோட்டி பாலத்தில் விரிவான வாகன சோதனைச் சாவடி நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஆறு நபர்கள் டோரிகஞ்ச் நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் அதிவேகமாக செனாறதை கண்டு நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், சந்தேக நபர்கள் தப்பி ஓட முயன்றனர். இதன் விளைவாக போலீசார் அவர்கள் அதிவேகமாக துரத்தி சென்றனர். இதனால் குற்றவாளிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தற்காப்புக்காக போலீசார் பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், பத்து தோட்டாக்கள், ஒரு பல்சர் மோட்டார் சைக்கிள் மற்றும் கணிசமான அளவு திருடப்பட்ட நகைகளை அதிகாரிகள் மீட்டனர். தப்பிச் சென்ற மேலும் நான்கு பேரை பிடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.