Liverpool Car Rams: லிவர்பூல் அணியின் பேரணியில் அதிவேகமாக நுழைந்த கார் இடித்து 50 பேர் காயமடைந்தனர்.

கோர விபத்து:

இங்கிலாந்தை சேர்ந்த லிவர்பூல் கால்பந்தாட்ட அணி பிரீமியர் லீக் கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, வீரர்கள் பேருந்தில் கோப்பையுடன் இருந்தபடி பேரணியில் ஈடுபட்டனர். நகரின் பிரதான பகுதிகள் வழியே நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு தங்களது அபிமான வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த கூட்டத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் குறைந்தபட்சம் 50 பேர் காயமடைந்த நிலையில், 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த 53 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஃவீன்ஸ் ட்ரைவ் பகுதியில் தொடங்கி ப்ளெண்டல் ஸ்ட்ரீட்டை நோக்கி மொத்தம் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பேரணி தொடங்கியது. திட்டமிட்ட பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த கார் ரசிகர்கள் சிலர் மீது மோதியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் காரை சுற்றி வளைத்து தாக்கி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். உடனே உள்ளே இருந்த ஓட்டுனர் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து, சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளார். இதனால் சிலர் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காரின் மீது குவிந்து தாக்க தொடங்கினர். உடனே அங்கு வந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, கார் ஓட்டுனரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காவல்துறை சொல்வது என்ன?

தாக்குதலை தனிநபர் மட்டுமே நடத்தியுள்ளார், அவருடன் கூட்டாளிகள் என யாரும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தீவிரவாத தொடர்பு ஏதும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உட்பட இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.