Shimla Cloud Burst: சிம்லாவில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல கார்கள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேகவெடிப்பால் கனமழை:
இமாச்சல பிரதேசத்தின் சிம்லா பகுதியில் சனிக்கிழமை மாலை கனமழை கொட்டியது. குறிப்பாக ராம்பூர் பகுதியில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை கொட்டியுள்ளது. இதன் காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அபாயகரமான சூழல் ஏற்பட்டு,ஜகட்கனா பகுதியில் பல வாகனங்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வீடியோ வைரல்:
சனிக்கிழமை அன்று மாலை சிம்லாவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி மற்றும் மின்னலுடன் மழை வெளுக்க தொடங்கியுள்ளது. சுமார் 6 மணியளவில் பக்கல்ட் இஞ்கட்கனா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயரமான பகுதிகளில் இருந்து, தாழ்வான பகுதியை நோக்கி கசடுகள், சேற்றுடன் வெள்ளம் சீறிப்பாய்ந்துள்ளது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டு, ஆங்காங்கே நில அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தற்போது வரை 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தற்போது வரை வெளியாகவில்லை.
மீட்பு பணிகள் தீவிரம்:
உள்ளூர் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் படிந்துள்ள கசடுகள் மற்றும் சேற்றை அகற்றி, யாரேனும் காணாமல் போயுள்ளனரா என்றும் தேடி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் அங்குள்ள சுற்றுலா பயணிகள், இயல்பு நிலை திரும்பும் வரை குடியிருப்பில் இருந்து வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, சில கார்கள் மலையடிவாரங்களுக்கு அடித்துச் செல்லப்பட்டு கடுமையாக சேதமடைந்துள்ளன.