Sabarimala: கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பனுக்கென தனி பக்தர்கள் நாடு முழுவதும் இருந்தாலும், தென் மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்கள் ஐய்யப்பனின் தீவிர பக்தர்களாக உள்ளனர். இந்த கோவிலுக்கு மற்ற கோவில்களைப்போல் நினைத்த நேரங்களில் செல்ல முடியாது. அதேபோல் இந்த கோவிலில் பெண்களை அனுமதிப்பது கிடையாது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஐய்யப்பனை வழிபட சபரிமலைக்குச் செல்லலாம் என நீதிமன்ற உத்தரவும் உள்ளது. அதேபோல் குழந்தைகளில் அண் பெண் வித்தியாசம் இல்லாமல் சபரிமலைக்குச் சென்றுவருவதை கோவில் தேவஸ்தானம் அனுமதிக்கின்றது.
இந்நிலையில், பத்து வயதே நிரம்பிய சிறுமி ஒருவர் 50வது முறையாக சபரிமலை ஐய்யப்பனை தரிசனம் செய்ய வந்து சாதனை படைத்துள்ளது மட்டும் இல்லாமல் பக்தர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இதற்காக நாடுமுழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து அடுத்த 60 நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த 60 நாட்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐய்யப்பனுக்கே உள்ள சிறப்பு வழிபாடுகளில் ஒன்றான இருமுடி கட்டிக்கொண்டும் விரதம் இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதன்படி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30ஆம் தேதி சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு தலைமையில் மேல் சாந்தி முரளி தேவஸ்தானத்தின்சார்பாக நடையை திறந்தார். மகர விளக்கு பூஜையின் மிகவும் முக்கியமான பூஜையான மகரஜோதி தரிசனம் வரும் 15ஆம் தேதி சபரிமலையில் நடைபெறவுள்ளது.
சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்- சிறுமிகள் அதிகளவில் தங்களது பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் தங்களது குழந்தைகளையும், உறவினர்களின் குழந்தைகளையும் அதிகப்படியாக அழைத்து வருவதென்பது அதிகமாகிக்கொண்டே வருகின்றது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வந்து ஐய்யப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் 10 வயது சிறுமி ஒருவர் 50-வது முறையாக சபரிமலைக்கு யாத்திரை வந்து ஐப்பனை தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் ஏழுகோன் பகுதியை சேர்ந்த அபிலாஷ் மணி ஐய்யப்பனின் தீவிர பக்தர். இவரின் மகள் அதிதிக்கு 10 வயது பூர்த்தியாக ஒரு நாள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது ஜனவரி 3ஆம் தேதி தனது தந்தையுடன், இருமுடி கட்டி சபரிமலைக்கு 50-வது முறையாக யாத்திரை வந்துள்ளார். சிறுமி அதிதி, எழுகோனில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
அதிதி பிறந்து ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்து முதன் முறையாக ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு தனது தந்தை அவரை அழைத்து வந்துள்ளார். இதன் காரணமாக 10 வயதிற்குள் 50 முறை சபரிமலைக்கு வந்து ஐய்யப்பனை தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளார். சிறுமி அதிதியின் இந்த ஆர்வம் குருசாமிகள் உட்பட பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.