Travel With Abp தொடரில் இன்று நாம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள, மேகமலை என்னும் அழகிய சுற்றுலா தலம் குறித்து பார்க்க உள்ளோம்.


தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைக்கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு அழகிய நில அமைப்பை கொண்ட இடம். மேகமலைக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் திராட்சை தோட்டங்களும், தென்னை மரங்களும், காற்றாலைகளும் நிறைந்த கிராமச் சாலைகளில் செல்லும் போதே, மேகங்கள் நம்மை வரவேற்கும்.




மேகமலைக்கு செல்ல  நேரக்கட்டுப்பாடு


சின்னமனூர் அருகே தென்பழனி என்ற இடத்தில் இருந்து மலைவழிச்சாலை துவங்கும். மேகமலை ஒரு பாதுகாகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் செல்லும் வழியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில்  நமது விபரங்களை பதிவு செய்துவிட்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது வனத்துறை. மேகமலை செல்வோர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


சிரமமின்றி செல்ல வாகன பாதை


மலைப்பாதை வளைந்து நெளிந்து மலையேறும். புதிதாக போடப்பட்ட தார் சாலையில் எந்த சிரமமும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன. பல வருடங்களாக ஒரு சில தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்த போது, குறுகிய சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் வாகனங்கள் செல்ல சிரமத்திற்கு உள்ளாகி வந்தன.


ஆனால், அப்படி இருந்த சாலை அரசிடம் ஒப்படைத்த பின்னர் தான், புதிய தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. 2017 ம் ஆண்டிற்கு பின்னர் போடப்பட்ட தார் சாலைகளால், மேகமலைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.




ஒவ்வொரு வளைவுகளுக்கும் பூக்களின் பெயர்கள்


மலைப்பாதையில் செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் சின்ன சின்ன அருவிகள் நம்மை கவரும். மலைவழிச்சாலையெங்கும் கிடக்கும் யானை சாணங்கள் நமக்கு சிறு அச்சத்தை தரும். மேகமலை செல்ல பகல் நேரம் மட்டுமே அனுமதி கிடைப்பதால்  நாம் செல்லும் வழியில் எந்த வன விலங்கும் குறுக்கிடாது. அப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அக்கொண்டை ஊசி வளைவுகளுக்கு அழகான பண்டைய தமிழ் பூக்களின் பெயர்கள் வைக்கப்பட்டதும் அதன் பெயர்கள் பொருந்திய பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.




தேயிலை விவசாயம்


இங்கு அதிகளவில் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. தேயிலையும், காபியும் அதிகளவில் இங்கு பயிரிடப்படுகிறது. யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாகவும் மேகமலை உள்ளது. வருச நாடு அருகே இருக்கும் சின்னச் சுருளி இங்கு தான் உற்பத்தியாகிறது. மேகமலையில் மிக உயரமான இடமாக இருக்கும் ஒரிடம் மகாராஜா மெட்டு.


மகா ராஜா மேட்டிற்கு செல்ல டாடா சுமோ போன்ற வாகன வசதி உண்டு. 1000 ரூபாய் முதல் 1500 வரை வசூலிக்கப்படுகிறது.  நமது கார்களை நிறுத்தி விட்டு, அவற்றில் சென்று திரும்பலாம். இரு சக்கர வாகனங்களிலும் செல்ல முடியும்.




சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களுக்கு ஊடாக கரடு முரடான மண் சாலைகள் ஏறி இறங்கி, வளைந்து நெளிந்து செல்லும். மகாராஜா மேட்டிற்கு செல்ல வனத்துறை நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இப்படி பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி  இயற்கையின் பேரழகை குறைந்த செலவில் கண்டு இரசிக்க ஒரு இடமானது மேகமலை. அதிக எதிர்பார்ப்புகள் இன்றி ஒரு முறை சென்று வரலாம்.