காஞ்சிபுரம் என்றாலே கோயில் மற்றும் திருவிழா நகரம்தான். காஞ்சிபுரம் நகர் முழுவதுமே, புராதன மற்றும் பழமையான கோயில்கள் நிறைந்த நகரமாக உள்ளது. அந்த வகையில் தொடர்ந்து நாம் Travel With Abp தொடரின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து, பார்த்து வருகிறோம் (Kanchipuram Temple City) அந்த வகையில் இன்று அருள்மிகு காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் பற்றி பார்க்க உள்ளோம்.




அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேஸ்வரர் திருக்கோயில்


காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவ ஆலயங்களில் ஒன்றாக வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. முனிவர்கள் மற்றும் தேவர்கள் இடையே வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்து குறித்து சந்தேகம் எழத் துவங்கியது. இதன் காரணமாக இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்பட துவங்கியது.


இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். வழிபாடு செய்தபொழுது நேரில் தோன்றிய இறைவன் அவர்களுடைய வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவில் இருக்கும் சிவபெருமானுக்கு, " வழக்கறுத்தீஸ்வரர் " என பெயர் பெற்றது.




இப்பகுதியில் பல நூற்றாண்டுக்கு முன்பே வழக்கறுத்தீஸ்வரர் கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் இப்பொழுது இருக்கும் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் ஏதாவது கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பிரச்சனை இருந்தால், இருதரப்பினரும் இக்கோயிலுக்கு அழைத்து வருவார்கள்.


இக்கோயிலில் சத்தியம் செய்ய சொல்வார்கள், இக்கோயிலில் பொய் சத்தியம் செய்தால் அவர்களுடைய குடும்பம் விருத்தி ஆகாது என்பது நம்பிக்கை. இதனால் இக்கோயிலில் பொய் சத்தியம் செய்ய தவறு செய்தவர்கள் பயந்து உண்மையை கூறி விடுவார்கள்.


பரிகார முறை என்ன ?


வழக்குகளில் சிக்கி தவித்து வருபவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், வழக்கில் இருந்து விடுபடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தலத்து சிவபெருமானை 16 தீபம் ஏற்றி, 16 முறை வலம் வந்து, 16 வாரம் தொடர்ந்து அன்னதானம் செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். வழக்குகளில் சிக்கல் இருப்பவர்கள்,செய்யும் தொழிலில் சிக்கல் இருப்பவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், தொடர் சண்ட சர்ச்சரிவுகளில் கஷ்டப்படுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து 16 வாரம் தொடர்ந்து தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம்.


படையெடுத்த  பிரபலங்கள் 


இக்கோவிலுக்கு உள்ளூர் பிரபலங்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் தொடர்ந்து படையெடுப்பது வழக்கம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கனிமொழி திகார் சிறையில் இருந்த பொழுது, இக்கோவிலை பற்றி கேள்விப்பட்ட ராஜாத்தி அம்மாள் வசந்தியை அனுப்பி வைத்ததாக அப்பொழுது தகவல்கள் பரவியது. அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு பெங்களூரில் சூடு பிடித்த சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஒரே வாகனத்தில் வந்து அதிகாலையில் அவசர அவசரமாக இக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.




ஒரு கட்டத்தில் ஜெயலலிதா சார்பாக சசிகலா நேரடியாக வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது. பீப் பாடல் காரணமாக சிம்பு சர்ச்சையில் சிக்கி இருந்த பொழுது அவரது தந்தை டி.ராஜேந்திரன் தரிசிக்க ஓடோடி வந்த கோயிலும் இக்கோயில் தான். இதுபோக கார்த்திக் சிதம்பரம், ராதிகா சரத்குமார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக்சவான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இக்கோயிலில் வந்து தரிசனம் மேற்கொண்டு சென்றுள்ளனர்.