காதலிக்காக கண்ணாடி மாளிகை கட்டிய 18ம் நூற்றாண்டு ராஜா 


 

என்னுடைய நண்பர்களுடன் கிராமத்தில் ஒன்றுகூடி பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது என்னுடைய நண்பன் அவனுடைய காதலை பற்றி பேசிக்கொண்டு இருந்தான். தன்னுடைய காதலுக்காகவும்  காதலிக்காகவும்  இப்படியெல்லாம் செய்வார்களா என அவனிடம் கிண்டலாக கேட்டேன், அதற்கு காதல் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது என்ன என்று கேட்டான். அதற்கு சற்றும் தயங்காமல் தாஜ்மஹால் என்று கூறினேன். ஏனென்றால் காதலிக்காக தாஜ்மஹாலை கட்டியுள்ளார் ஷாஜகான் என்றேன், அதற்கு அவன் அதேபோல் திருவண்ணாமலையிலும் ஒருவர் தன்னுடைய காதலிக்கு மிகப்பெரிய கண்ணாடி மாளிகையை காட்டியுள்ளார் என்று கூறினான். என் மனத்துக்குள் எங்குள்ளது அந்த கண்ணாடி மாளிகை,  யார் அவர், அவருடைய காதலி மீது அந்தளவுக்கு காதலா என அதனை தேடி புறப்பட்டேன். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் உள்ள பூசிமலை குப்பம் ஊராட்சியில் நான்கு பக்கங்களிலும் அடர்ந்த, எழில்மிகு சிறு மலை தொடர்களுக்கு மத்தியில் பூசிமலை அமைந்துள்ளது. இங்கு பிரமிக்கத்தக்க பங்களா ஒன்று உள்ளது. அதனை "பூசிமலை குப்பம் மாளிகை" என்று கூறுகின்றனர்.

 

 





கண்ணாடிகளால் கட்டப்பட்ட மாளிகை


மேலும் இந்த மாளிகையின் தரை மற்றும் சுவர்கள் கண்ணைக்கவரும் வண்ணமிகு பளிங்குபோல் மின்னியதாலும் இதற்கு விதவிதமான கண்ணாடி பொருட்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாலும் கண்ணாடி மாளிகை என்றும் குறிப்பிடுகின்றனர். மாளிகை இரண்டு ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்குகளாக செங்கல், சுண்ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டுள்ளது. தேவையான இரும்பு, எஃகு, மரம், கண்ணாடி பொருட்கள் அயல் நாட்டில் இருந்து கொண்டு வந்து பிரிட்டிஷ் முறையில் கட்டப்பட்டு இருந்தது. எனினும் மேற்கூரை மொட்டை மாடி வடிவத்தில் மெட்ராஸ் முறையில் அமைத்துள்ளனர். அக்காலத்திலேயே மாளிகைக்குள் புகை போக்கியுடன் கூடிய சமையலறை, உணவறை, படுக்கையறையுடன் சேர்ந்தபடி குளியலறை என தனித்தனி அறைகள் கட்டப்பட்டதுடன் மழைநீர் வெளியேற்றத்திற்கான குழாய்கள் மற்றும் விசாலமான அரங்கம், மூன்று சுழல் படிகட்டுகளும் ஒரு சாதாரண படிகட்டு உள்ளிட்டவையும் அதிசயதக்க வகையில் அமைந்துள்ளன. படிக்கட்டு வசதியுடன் கூடிய நீச்சல் குளம், குதிரை லாயம், பூந்தோட்டம் முதலானவைகளும் மாளிகைக்கு வெளியில் காணப்பட்டன. 

 




 

பிரெஞ்ச் நாட்டுப் பெண் ஒருவரின் அழகில் மயங்கிய ராஜா 


இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், “கண்ணாடி மாளிகையை 1850-க்கு பிறகு ஆரணி ஜாகீர் திருமலை ராவ் சாகிப் என்பவர் ஆங்கிலேய கட்டட கலைஞர் வில்லியம் போக்சன் என்பவரை கொண்டு கட்டியுள்ளார். திருமலை ராவ் ஒருமுறை இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, பிரெஞ்ச் நாட்டுப் பெண் ஒருவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டிருக்கிறார். அந்த பெண்ணை அங்கேயே காதலில் விழவைத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய அவர் , இங்கிலாந்திலிருந்து அவரை அழைத்து வந்து பெற்றோர் முன் நிறுத்தியிருக்கிறார். பெற்றோரின் சம்மதம் கிடைக்காததால், ஊருக்கு வெளியில் இந்த இடத்தில் ஐரோப்பிய நாட்டின் கட்டட கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவரை அழைத்துவந்து தன்னுடைய காதலிக்கு பிரம்மாண்ட மாளிகையை எழுப்பி அந்த மாளிகையிலேயே காதலியுடன் வாழ்ந்திருக்கிறார் திருமலை ராவ். காலப்போக்கில், அவர்கள் மறைந்தப் பின் மாளிகையில் யாருமே வசிக்கவில்லை. தன்னுடைய காதலி மீது இவ்வளுவு காதல் உள்ளதா என ஆச்சரியத்துடன் பார்த்தேன், இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணாடிமாளிகையை சென்று பார்த்து வருகின்றனர்.