தஞ்சாவூர்: நெருப்பாக கோடை வெயில் கொளுத்தினாலும் சுற்றுலாப்பயணிகள் வருகை தஞ்சைக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கோடை வெயிலிலும் அறிவுசார் இடங்களை பார்ப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் மக்கள். அந்த வகையில் முதலிடம் பிடிப்பது தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்தான்.


தஞ்சாவூரின் தனி அடையாளம்


தஞ்சை என்றாலே கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பெரிய கோயிலும், அசர வைக்கும் கட்டிட அமைப்புடன் உள்ள அரண்மனையும் நினைவுக்கு வரும். எப்படிப்பா இதையெல்லாம் கட்டினாங்க என்ற குழந்தைகளின் கேள்விக்கு வானுயர்ந்து நிற்கும் அரண்மனையை பார்த்து அப்படிதான்பா கட்டினாங்க என்ற பதிலை சொல்பவர்கள்தான் ஏராளம். இதை தவிர மேலும் ஒன்றை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வார்கள். அதுதான் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். தஞ்சாவூரின் தனி அடையாளம் என்று சொன்னாலும் மிகையில்லை.




49 ஆயிரம் ஓலைச்சுவடிகள்


சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும், அறிவுக் களஞ்சியத்துக்கு சரஸ்வதி மகால் நூலகமும் இன்றும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக உள்ளன. இதன் பெருமைக்கு உதாரணம் இங்குள்ள ஓலைச்சுவடிகள்தான். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, இந்தி என 49 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. 23,169 காகிதச் சுவடிகள், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்து ஆவணங்களும் உள்ளன.


மருத்துவம் தொடர்பான வியக்கவைக்கும் குறிப்புகள்


அரிய வகை மூலிகைகள், மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய ஆச்சர்யமான குறிப்புகளும் உள்ளன. மருத்துவம் தொடர்பாகவும் சிகிச்சை தொடர்பாகவும் வியக்கவைக்கும் குறிப்புகள் இதில் அடங்கி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அனுமதி பெற்று இங்கு வந்து ஓலைச்சுவடி மற்றும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் முறை கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. இதேபோல், காகிதச் சுவடிகளும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் உலகில் முதன்மையானதாகவும் விளங்கி வருகிறது சரஸ்வதி மகால் நூலகம்.


சரசுவதி பண்டாரம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டது


தஞ்சையில் இப்படி ஒரு அறிவுக்களஞ்சியம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. சோழர்களால் சரசுவதி பண்டாரம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது என தெரிய வருகிறது. இந்த நூலகத்தில் பணிபுரிந்தவர்கள், சரசுவதி பண்டாரிகள் என்றழைக்கப்பட்டனராம். கி.பி 1122-ம் ஆண்டு முதலே இந்த நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கிறது என்பதும் தஞ்சையின் பெருமையில் பதியப்பட்டுள்ள மற்றொரு வைரக்கல்தான்.


அதன்பிறகு ஆங்கிலேயேர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் இந்த சரஸ்வதி மகால் நூலகம் பராமரிக்கப்பட்டு தற்போது பிரமாண்ட வளர்ச்சிகளை அடைந்துள்ளது. நூற்றாண்டுக்களை காலங்களைக் கடந்து பெரும் அறிவுப் பொக்கிஷமாக திகழ்கிறது. மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர், நூல்கள் மீது மிகுந்த ஆர்வம் வைத்திருந்தார். இதனால், நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்ததுடன், நூல்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். இந்த நூலகம் உலகத்தின் பொக்கிஷம் எனப் பாராட்டப்படுகிறது.


1918ம் ஆண்டில் பொதுநூலகமாக அறிவிப்பு


மராட்டிய மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நூலகத்தை ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில்,1918-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசுடைமையாக்கி, பொது நூலகமாக அறிவித்தனர். சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது இந்த நூலகம். பனை ஓலைச்சுவடிகள் இங்குள்ளது போல் வேறு எங்கும் அதிக அளவில் இல்லை. அறிவார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த சரஸ்வதி மகால் நூலகத்தின் பெருமை தஞ்சைக்கு கிடைத்த மாபெரும் கிரீடம் என்றால் மிகையில்லை. இதை அறிவுக்களஞ்சியத்தின் பெட்டகம் என்று கூறுவதிலும் தவறில்லை.