தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மக்கள் எளிதில் சென்றடைய கூடிய சுற்றுலா தளங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 


ஏற்காடு: 


சேலம் மாவட்டத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பிரதேசமாக அமைந்துள்ளது ஏற்காடு. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் உள்ள குளிர் பிரதேசங்களில் ஒன்றாகும். ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், கிளியூர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிஸ் சீட் காட்சி முனை, ஜென்ஸ் சீட் காட்சி முனை, சேர்வராயன் மலை, மஞ்சகுட்டை காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் இடமாக அமைந்துள்ளது. இது மட்டுமின்றி ஏற்காட்டில் கோடை காலத்திலும் வெப்பநிலை குறைவாக உள்ளதால் சேலம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார். 



குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா: 


சேலம் மாநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா. இங்கு மான், வெள்ளை மயில், மயில், நாரை கொக்கு, மலைப் பாம்புகள், முதலைகள், நரி, வெளிநாட்டுக் குரங்கு வகைகள், ஆமை, பறவைகள் என பல உயிரினங்கள் உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் வன உயிரியல் பூங்கா குளிர்ந்த நிலையில் இருக்கும். இதனால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக சேலம் மக்கள் அதிக அளவில் வார இறுதி நாட்களில் வன உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டா குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருமையான சுற்றுலா தளம் ஆகும். குறிப்பாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை சார்பில் மினி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு கோரிமேடு பகுதியில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



மேட்டூர் அணை:


சேலத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் சிறப்புமிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு மேட்டூர் அணை மிக பிரம்மாண்டமாக காட்சியளித்து வருகிறது. காவேரி ஆற்றின் குறிக்க கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையில் பரிசல் சவாரி, பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மீன் பிடித்து காவிரி கரையோரம் சமைத்து சாப்பிடும் வசதியும் உள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்கள் நண்பர்களுடன் மேட்டூர் சென்று வருவர். 



முத்துமலை முருகன் கோவில்: 


சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏத்தாப்பூர் பகுதியில் முத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உலகின் மிக உயர முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகன் சிலை 146 அடியில் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். குறிப்பாக இந்த கோயிலில் விசேஷ நாட்களில் மூலஸ்தானத்தில் உள்ள முருகர் வள்ளி தெய்வானை இணைந்து தங்க கவசத்தில் காட்சியளித்து வருகிறார். மேலும், இந்த கோயிலில் மாலை தங்கத்தேர் பவனி உலா நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். முத்துமலை முருகன் கோயில் தற்போது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.