தஞ்சாவூர்: சுற்றுலா போகணுமா... அப்போ வாங்க தஞ்சாவூருக்கு... பக்தியும் இருக்கும், பொழுதும் போகும் என்று அனைத்தும் நிரம்பிய சுற்றுலாத்தலம்தான் தஞ்சாவூர். தஞ்சை என்றால் "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்றும் பொருள்படும். அதற்காக நெற்களஞ்சியம் மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். இன்னும் இருக்கு... சொல்ல... சொல்ல நிறைய இருக்கு. கட்டிடம், கலை, கதை, கவி என்று தஞ்சையின் மண், கல் கவிப்பாடும். நெல் வயலை தொட்டு வரும் காற்றும் இசைப்பாடும்.
எத்தனை பெருமை, சுற்றிப்பார்க்க எத்தனை இடம் என்று மனம் ரம்யமாகும். மண்ணுக்கே வாசனை கொடுக்கும் ஊர். மணம் மண்ணுக்கு மட்டுமில்லை இங்கு வரும் அனைவருக்கும்தான். சுற்றுலாப்பயணிகளுக்கு தெரிந்த பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, மணிமண்டபத்திற்கு அடுத்தப்படியாக மனதை அள்ளும் தென்னக பண்பாட்டு மையம் மிக முக்கியமான இடமாகும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அமைத்தது. 25 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அந்தமான், லட்சத் தீவு ஆகியவற்றின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுநெடுவென்று விண்ணை தொடுமோ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு வனப்பு மிக்க தலையாட்டி பொம்மைகள் வாங்க, வாங்க என்று அழைக்கும். சுமார் இருபந்தைந்து அடி உயரம் இருக்கும். கண்ணாடி இழை மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்டவை இவை. நுழைவாயிலின் இடது புறம் நம்மோட பரிணாம வளர்ச்சியை சித்தரிக்கும் பொம்மைகள்.
நமது நாட்டின் கலை மட்டுமின்றி உலகின் உள்ள பராம்பரிய கலைகளை பரப்புவதற்காக தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்திற்கு ஏராளமான கலைஞர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் கலைகளை கொண்ட நுழைவாயில் கதவுகள் பிரமிக்க வைக்கிறது. 3 ஆயிரம் கலைப்பொருட்கள் உள்ள கலைக்கூடம், கண்காட்சி கூடம், கலைக் கூடத்தில் இருந்த வர்ண ஓவியங்கள், கருங்கல் சிற்பங்கள், கண்ணாடி சிற்பங்கள், மைய மண்டபத்தில் இயற்கை வர்ணங்களால் வரையப்பட்டுள்ள கேரள முரல் ஓவியம் பார்க்க, பார்க்க திகட்டாத இனிப்பு போல் இருக்கிறது. இந்த ஒவியம் மகாபாரத ராமாயண இதிகாசக் கதைகளிலிருந்து வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த அற்புதமான சுற்றிப்பார்க்க சிறந்த இடமாக தென்னகப் பண்பாட்டு மையம் உள்ளது.
இங்கு, கலை விழாக்கள், பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்குதல், நாட்டுப்புற கலை விழா, கலைப் போட்டி, கலைக்கண்காட்சியும் நடத்தப்படுகிறது. வாங்க... வந்து பாருங்க. தென்னகப்பண்பாட்டு மையம் உங்களை மயக்கி விடும்.