தஞ்சாவூர்: சுற்றிப்பார்க்க கோயில்களும், சுற்றுலா இடங்களும் ஏராளமாக தஞ்சையில் உள்ளன. அந்த வகையில் தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் விருப்ப இடமாக விளங்குகிறது திருவையாறில் தியாகராஜர் வசித்த இல்லம்.

இசை என்றால் மயங்காத மனமும் இருக்குமோ. இனம், ஜாதி, மதம்,  மொழி இவைகளைத் தாண்டி நிற்கும் அற்புதம் இசைக்கு மட்டுமே உண்டு.  நல்லிசைக்கு மயங்காதோர் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் செய்தவர் தியாக பிரம்மம் என்று போற்றப்படும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர். சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

திருவாரூரில் உள்ள புதுத்தெருவில் ராமபிரம்மம் - தாய் சீதாம்பாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர். இவர் சிறுவயதிலேயே குடும்பத்துடன் திருவையாறுக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் பதினெட்டாம் வயதில் பார்வதி என்பவரை மணந்தார். பார்வதி குழந்தைப் பேறின்றி இறந்துவிட்டார். பின்னர் பார்வதியின் தங்கை கனகம்மாளை தியாகராஜர் மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற மகள் பிறந்தார்.
 
தியாகராஜரின் தாய் வழி பாட்டனார் காளஹஸ்தி அய்யர் தஞ்சாவூர் அரண்மனையில் சமஸ்தான வித்வானாக பணியாற்றியவர். தியாகராஜரின் தாய் சீதாம்பாளுக்கும் நன்கு பாடத் தெரியும். தஞ்சாவூர் மராட்டிய மன்னர் இரண்டாம் துலாஜாஜி தம் சபையில் ராமநவமியின்போது ராமபிரம்மம் ராமாயணத்தைைப் படித்து விரிவுரை கூறுவார். இவரது அறிவுத் திறனைப் பாராட்டிய துலாஜாஜி ராமபிரம்மத்துக்கு பசுபதி கோயிலில் கொஞ்சம் நிலமும், திருவையாறு திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டையும் அன்பளிப்பாக கொடுத்தார். ராமபிரம்மம் தன் மகன்களுக்கு விட்டுச்சென்ற சொத்து இந்த நிலம் மற்றும் வீடு ஆகியவைதான்.

ராமபிரம்மம் காலமானதும் பாகப்பிரிவினை நடந்தது. இதில் வீட்டின் வடக்குப் பகுதியை தியாகராஜருக்கும், தெற்குப் பகுதியை அவருடைய அண்ணன் ஜல்பேசன் என்கிற பஞ்சாபகேசனுக்கும் ஒதுக்கினர். இந்த வீட்டில்தான் தியாகராஜர் தனது இறுதிகாலம் வரை வாழ்ந்தார். இவரது மனைவி 1845 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தியாகராஜர் 1847 ஆம் ஆண்டு ஜன. 6-ம் தேதி மறைந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தியாகப் பிரும்ம ஆராதனை மகோத்சவ சபையினர் தியாகராஜர் இறுதி காலம் வரை வசித்த வீட்டை மீட்டனர். அதன் பின்னர் இந்த வீடு இசை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும்.

தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் திருவையாறுக்கு சென்றால் முதலில் தியாகராஜர் வசித்த வீட்டை நோக்கிதான் செல்கின்றனர். திருவையாறு திருமஞ்சன வீதியில் வலது புற வரிசையில் ஐந்தாவதாக உள்ள இந்த வீடு கடந்த 2011ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட கோயில் போல் உள்ள இந்த வீட்டைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இசைக்கு சேவை செய்த தியாகராஜரின் இல்லத்தை காண வேண்டும் என்று வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.