தஞ்சாவூர்: கோடை காலம் ஆரம்பிக்க போகுது. பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டாச்சுன்னா வீட்டில குழந்தைகள் சுற்றுலா போகணும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். சுற்றுலாவாகவும் இருக்கணும். குழந்தைகளுக்கும் அப்படியே என்டர்டெயிமென்டா இருக்கணும். அறிவும் வளரும்னு நினைக்கிறீங்களா. அப்போ எங்கே போறதுன்னு கேட்கிறீர்களா? நம்ம தஞ்சாவூருல இருக்கிற அருங்காட்சியகத்துக்கு வாங்க. தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாறி அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இங்கு 7டி திரையரங்கம், அரியவகை வெளிநாட்டு பறவைகள் பூங்கா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய சிலைகள் என்று தாராளமாக ஏராளமாக பார்க்க பல உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம், பிரிட்டிஷ் கட்டட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால், 1896 முதல் 1900ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, பழைய கலெக்டர் அலுவலகத்தை அதன் பழமை மாறாமல் பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ. 8.4 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உட்பட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நம் பாரம்பரிய கலைகள், நம் முன்னோர்கள் விவசாயத்திற்கு பயண்படுத்திய கருவிகள் என பார்த்து , பார்த்து வியந்து போகக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் பெருமுயற்சியால் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு அழகிய கற்சிலைகள், செப்புத் திருமேனிகள், இசைக்கருவிகள், விவசாயப் பொருட்கள், நில அளவை சாதனங்கள், காவிரி நதியின் டெல்டா காட்சியுடன் கல்லணைக் காட்சி போன்ற பல அரும் பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10-11ம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கால அரிய புத்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் தியான நிலையில் அமைந்துள்ள இந்த புத்தர் சிலை உடையாமல் முழுமையாக இருக்கிறது. அதேபோல் 10-11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர், 13ம் நூற்றாண்டை சார்ந்த பைரவர், பைரவி, 15-16 ஆம் நூற்றாண்டை சார்ந்த விஷ்ணு தேவி, பெண் தெய்வங்கள், மகாவிஷ்ணு, 15ம் நூற்றாண்டை சேர்ந்த படி அணைப்பு யாழி, 16-17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பைரவி, 18ம் நூற்றாண்டை சேர்ந்த சூரியன், ரதி தேவதை, ராகு கேது ஆகிய சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.