தஞ்சாவூர்: கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் சிறிய கிளிகள் முதல் பெரிய வகை மக்காவ் கிளிகள் பறந்து வந்து மக்கள் கைகளில் அமர்ந்து உணவு எடுக்கின்றன. இதை சுற்றுலாப்பயணிகள் குழந்தைகள் போல் ரசிக்கின்றனர். 


தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவியும் மக்கள்


டெல்டா பகுதி மக்களுக்குப் பறவைகளை மொத்தமாகப் பார்க்கும் இடமாக வடுவூர் பறவைகள் சரணாலயம் இருந்தாலும் பறவைகளை கைகளில் ஏந்தி அதோடு விளையாடி மகிழ அமைக்கப்பட்டது தான் இந்த ராஜாளி பறவைகள் பூங்கா. தஞ்சையில் உள்ள சுற்றுலா இடங்களில் இது முக்கிய அங்கமாகவே மாறி உள்ளது இந்த ராஜாளிப்பூங்கா என்றால் மிகையில்லை. இப்பூங்காவில் 20 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான அரிய வகை பறவைகள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இப்பூங்கா மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விருப்பமான இடமாக மாறியுள்ளது. இப்பூங்காவிற்கு நுழைவுக் கட்டணமாக 3 வயது குழந்தைகளை தவிர அனைவருக்கும் ரூ‌.150 வசூலிக்கப்படுகிறது.




கட்டணம் வொர்த்துதாங்க... மக்கள் திருப்தி


சற்று கட்டணம் அதிகம் என்று நினைத்தாலும் உள்ளே வந்து பறவைகளோடு கொஞ்சி விளையாடி மனதில் உள்ள கவலைகளை மறக்கும் சுற்றுலாப்பயணிகள் குழந்தைகளாகவே மாறி விடுகின்றனர். பின்னர் அவர்கள் கூறும் பொழுது மிகவும் திருப்தி. கொடுத்த பணத்திற்கு "வொர்த்து தான்" என்கின்றனர். இந்த பூங்காவில் மக்காவ் கிளிகள்,  லவ்பேர்ட்ஸ் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும் அவர்கள் பறவைகளுக்கு உணவு கொடுத்து விளையாடி மகிழ்கின்றனர். அர்ஜென்டினா நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 25 நாடுகளை சேர்ந்த வாத்து. முயல்,  லவ் பேர்ட்ஸ், மக்காவ் கிளிகள் பூங்காவில் உள்ளது.


தோளில், கைகளில் அமர்ந்து உணவு எடுக்கும் கிளிகள்


கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாட நினைக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பறவைகள் பூங்காவில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இங்குள்ள வாத்துகள் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டு, தண்ணீர் தொட்டியில் ஆனந்த குளியல் போட்ட காட்சிகளை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். கூண்டுக்குள் கிளிகள் கூட்டமாக வட்டமிட்டு சுற்றி பறந்து கீச்...கீச் என்று சத்தமிடும் ஒலி மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது என்று தெரிவிக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த இடத்தை விட்டு நகரவே மனமில்லை. சுற்றுலா பயணிகள் கைகளில் இருந்த உணவை கண்டதும் கிளிகள் பறந்து வந்து அவர்கள் கைகளில் அமர்ந்து சாப்பிடுகின்றன.




குழந்தைகள் மக்காவ் கிளிகளை அபார உயரத்தை கண்டு ஆரம்பத்தில் மிரண்டாலும் பின்னர் பிரெண்டாகி உணவு கொடுக்கின்றனர்.  தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ராஜாளி கிளி பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று நேரத்தை கழித்து வருகிறார்கள். வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு தஞ்சை ராஜாளி பறவைகள் பூங்கா அமைந்துள்ளது. 


கிளிகளுக்கு வெயில் தெரியாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு


சுட்டெரிக்கும் வெயில் ராஜாளி பறவைகள் பூங்காவில் குளிர் தேச பகுதியில் இருக்கும் வண்ண வண்ண கிளிகள் உள்ளிட்ட பறவைகள் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான தகரத்தினால் ஆன மேற்கூரை மீது தென்னங்கீற்றுகள் ஆங்காங்கே இடைவெளி விட்டு வேயப்பட்டுள்ளது. மேலும் கிளிகளுக்கு வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க பூத்தூறலாக தண்ணீர் குழாய் மூலம் ஷவர் போல் மழைச்சாரலாய் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.