Chennai Tourist Places in Tamil: சென்னை மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


சென்னை மாவட்ட சுற்றுலாத் தலங்கள்:


சென்னை மாவட்டம் தமிழ்நாட்டின் அரசு நிர்வாகம் சார்ந்த தலைநகராக மட்டுமின்றி, பிரதான வணிக நகரமாகவும் உள்ளது. கூடுதல் சிறப்பாக சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமான பல்வேறு அம்சங்களையும், சென்னை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினா தொடங்கி, வரலாற்றுச் சிறப்பை எடுத்துரைக்கும் எழும்பூர் அருங்காட்சியகம் என மிக முக்கிய சுற்றுலாத் தலங்களும், பரபரப்பான சென்னை நகருக்குள்ளேயே அமைந்துள்ளது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மெரினா கடற்கரை:


சென்னை என்ற பெயரை உச்சரித்தாலே அனைவரது நினைவுக்கும் வரும் முதல் இடமாக மெரினா கடற்கரை இருக்கும். வங்காள விரிகுடாவைச் சார்ந்த மெரினா கடற்கரை, இந்தியாவின் மிக நீண்ட மற்றும் ஆசியாவின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும். வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கி தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ தூரத்திற்கு இந்த கடற்கரை நீண்டுள்ளது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க இது இரு சிறந்த இடமாக திகழ்கிறது.மீன் அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் மண்டபம், முன்னாள் முதலமைச்சர்களின் நினைவிடங்கள்,  உழைப்பாளர்கள் சிலை போன்றவற்றுடன், அங்கு கிடைக்கும் பல்வேறு விதமான உணவுப் பொருட்களும் மெரினா கடற்கரை பக்கம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. அதேநேரம், மெரினா கடற்கரை மட்டுமின்றி திருவான்மியூர் கடற்கரை மற்றும் பெசண்ட்நகர் கடற்கரையிலும் நீங்கள் இயற்கை எழிலை ரசிகலாம். மாலை நேரங்களில் இந்த கடற்கரைக்கு செல்வது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கலாம்.


எழும்பூர் அருங்காட்சியகம்:


1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை அருங்காட்சியகம் எழும்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் இது ஒரு வரலாற்று புதையல் ஆகும்.  16.25 ஏக்கர் நிலப்பகுதி முழுவதும் பரவி தெற்காசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றான இதன் வளாகத்தில்,  46 காட்சியகங்கள் கொண்ட ஆறு கட்டடங்கள் உள்ளன. கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் மற்றும் இன்னும் பலவற்றின் மிகச்சிறந்த தலைசிறந்த களஞ்சியமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. பிரதான கட்டடம், வெண்கல தொகுப்பு, குழந்தைகளின் அருங்காட்சியகம்,தேசிய கலைக்கூடம் என பார்வையாளர்களை கவரும் சேகரிப்புகள் இடம்பெற்றுள்ளன.


கிண்டி தேசிய பூங்கா:


கிண்டி தேசிய பூங்காவிற்கு நீங்கள் நுழைந்துவிட்டால், பரபரப்பான சென்னைக்குள் தான் நாம் இருக்கின்றோமா என்ற சந்தேகம் நமக்கே எழுந்துவிடும். அப்படி ஒரு அமைதியான இடமாக இருக்கும். 1959 ஆகஸ்ட் 14 அன்று அப்போதைய பிரதமரான நேருவால் திறக்கப்பட்ட இந்த பூங்காவானது, ஒரு நகரத்திற்குள் அமைந்துள்ள சில தேசிய பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். ஏராளமான தாவர இனங்கள், விலங்கினங்கள் மற்றும் பறவையினங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பூங்காவின் ஒரு அங்கமாக உள்ள பாம்பு பண்ணையும், பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. அண்மையில் 30 கோடியில் இந்த பூங்கா புனரமைக்கப்பட்டு,  நீருற்றுகள், செல்ஃபி பாயின்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி என பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 


வணிக வளாகங்கள் & தி.நகர்


பிரமாண்டமாக காட்சியளிக்கும் வணிக வளாகங்கள் இன்று சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளன. ஃபோரம் மால், எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ, ஃபீனிக்ஸ் மால் என அமைந்துள்ள வணிக வளாகங்களில், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான இடமாக மட்டுமின்றி, ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலங்களாகவும் திகழ்கின்றன. குழந்தைகளை மகிழ்ச்சியாக விளையாடுவதற்கான பல்வேறு வசதிகளும் இந்த மால்களில் இடம்பெற்றுள்ளன. ஒரே கட்டடத்திற்குள் எல்லாமே கிடைக்கும் மால்கள் ஒருபுறமிருக்க, தி.நகர் ரங்கநாதன் தெரு என்பதும் ஒவ்வொருவரும் கட்டாயம் செல்ல வேண்டிய பகுதியாக உள்ளது. இங்கு ஒவ்வொரு கடைக்கும் ஏறி, இறங்கி பொருட்களை வாங்குவதே ஒரு தனி அனுபவம் தான்.


வள்ளுவர் கோட்டம்:


சென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, உலக்ப்புகழ் பெற்ற திருக்குறளை எழுதிய வள்ளுவருக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் சிற்பத் தேர் அமைப்பு கட்டப்பட்டுள்ளது. 39 மீட்டர் உயரத்தில் பளிங்குக் கல்லால் ஆன இந்த தேரை, இரண்டு யானைகள் இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. 


இங்குள்ள அரங்கத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் கூடலாம். இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது.  இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது,. அங்கு  திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.


மேற்குறிப்பிட்டவை மட்டுமின்றி தலைமை செயலகமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் சர்ச், கன்னிமேரா நூலகம், பிர்லா பிளானிடோரியம், பார்த்தசாரதி கோயில் ஆகியவையும் சென்னை மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாகும்.