Chengalpattu Tourist Places in Tamil: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத் தலங்கள்:


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் அண்டை மாவட்டமாக இருப்பது தான் செங்கல்பட்டு. விஜயநகர பேரரசுகளின் தலைநகராக இருந்த பெருமையை கொண்ட இந்த மாவட்டம், தற்போது தெற்கு ரயில்வேயின் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. அதோடு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான பல்வேறு விதமான சுற்றுலாத் தலங்களும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மாமல்லபுரம்:


பல்லவ மன்னர்களின் கட்டடக் கலையை பறைசாற்றும் வகையில், நூற்றாண்டுகள் கடந்து அமைந்துள்ள மாமல்லபுரம் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதன்படி, 



  • குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்

  • ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது ரதங்கள் 

  • கட்டுமானக் கோயில்கள்.


மொத்தமாக 8 மண்டபங்கள், 5 ரதங்கள் மற்றும் 3 கட்டுமான கோயில்கள் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும், கடற்கரைக் கோயில்கள், ரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-இல் யுனெஸ்கோ அறிவித்தது. இந்த சின்னங்களை ஒட்டியுள்ள கடற்கரையும், சுற்றுலாப் பயணிகளுக்கு மிக முக்கிய பொழுதுபோக்கு தலமாக அமைந்துள்ளது. மேலும், முதலைகள் சரணாலயமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்:


செங்கல்பட்டு மாவடத்தில் உள்ள வேடந்தாங்கர் பறவைகள் சரணாலயம், இந்தியாவின் பெரிய நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். அந்த நீர்நிலையில் மூழ்கியுள்ள மரங்களின் மீது கூடுகளை கட்டி ஆயிரக்கணக்கான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. சீசன் சமயங்களில் டார்ட்டர், பிளேமிங்கோக்கள், பெலிகன்கள், மவுண்ட் கோன்ஸ், ஹெரோன்ஸ், கிங்ஃபிஷர்ஸ், சாண்ட்பீப்பர்ஸ், வெள்ளை ஐபிஸ், ஸ்பூன் பில்ஸ், ஸ்வான்ஸ் மற்றும் சாம்பல் வேக்டெயில் என ஏராளமான பறவைகள், இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, வங்கதேசம், பர்மா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்து செல்கின்றன. கடந்த  400 ஆண்டுகளாகவே வேடந்தாங்கல் பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல்லும் வண்ணம் உள்ளன. சரியான சீசனில் இந்த பகுதிக்கு சென்றால், அது உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.


வண்டலூர் உயிரியல் பூங்கா:


செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் கடந்த 1855ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த உயிரியல் பூங்கா, இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். 228.4-ஏக்கர் பரப்பளவிலான இந்த பூங்காவில்,  2,553 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, பூங்காவில் சுமார் 1,500 காட்டு இனங்கள் உள்ளன. இதில் 46 அழிந்து வரும் உயிரினங்கள் அடங்கும்.  2010ஆம் ஆண்டு நிலவரப்படி, பூங்காவில் சுமார் 47 வகையான பாலூட்டிகள், 63 வகையான பறவைகள், 31 வகையான ஊர்வன, 5 வகையான நீர்நில வாழ்வன, 28 வகையான மீன்கள் மற்றும் 10 வகையான பூச்சிகள் உள்ளன. தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த பூங்கா, மாநிலத்தின் விலங்கினங்களின் களஞ்சியமாக திகழ்கிறது. இதனுள் சென்று வருவது வனவிலங்குகள் நிறைந்த ஒரு காட்டிற்குள் சென்று வந்த அலாதியான அனுபவத்தை வழங்குகிறது. ஒரு நாள் முழுவதையும் இங்கு உற்சாகமாக கழிக்கலாம்.


தட்சிண சித்ரா:


தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் மையமாக உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த பண்பாட்டு கலாச்சார மையம், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும், வாழ்வியலை, ஒரே இடத்தில் அறிய இந்த தட்சிண சித்ரா மையம் சரியான தேர்வாக இருக்கும்.


முட்டுக்காடு:


கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு போட் ஹவுஸ் என்பது, ஒரு நீர் விளையாட்டு மையமாகும். இங்கு படகோட்டுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்த போட் ஹவுஸ் செயல்பட்டு வருகிறது. மாமல்லபுரம் செல்வபவர்கள், சில மணி நேரம் இங்கேயும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம்.


மேற்குறிப்பிட்ட அரசால் பராமரிக்கப்படும் சுற்றுலாத் தலங்களை தவிர, விஜிபி பொழுதுபோக்கு பூங்கா, எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்கா, ஸ்ரீ மஹாபைரவர் ருத்ராலயம் மற்றும் இஷ்கான் போன்ற பல பொழுதுபோக்கு மற்றும் வழிபாட்டு தலங்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளன.