பிரபல யூடியூப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் புதிய திருத்த கொள்கைகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில் மூன்று முக்கிய கொள்கைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த நவம்பர் மாதம் முதலே அமெரிக்கா போன்ற நாடுகளில் அமலில் உள்ள இந்த புதிய கொள்கைகளானது , ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
முக அங்கீகார கட்டுப்பாடுகள் (facial recognition restrictions):
இதன் மூலம் யூடியூப்பில் சேனல் வைத்திருக்கும் நபர், பிற நபர்களின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தும் பொழுது அந்த நபரி அனுமதியை பெற்றிருக்க வேண்டும் . அனுமதியை பெறாத நிலையில் பயன்படுத்தினால், சம்மந்தப்பட்ட உரிமையாளர் அதற்கான க்ளைமை பெற முடியும். இந்த கொள்கை ஏற்கனவே இருந்தாலும் தற்பொழுது இது தீவிரமாக்கப்பட்டுள்ளது.
பணமாக்குவதற்கான உரிமை (YouTube’s right to monetize)
பொதுவாக யுடியூபில் சேனல் தொடங்கியவராக இருந்தால் YPP அங்கீகாரம் பெற்றவராக இருந்தால் மட்டுமே நீங்கள் வருவாயை பெற இயலும். அதன் பிறகு வீடியோக்களின் இடையே வரும் விளம்பரங்கள் மூலமும் நீங்கள் பணமாக்குவதற்கான உரிமையை பெறலாம். ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள கொள்கையின் அடிப்படையில் புதிதாக சேனல் தொடங்கும் நபருக்கும் விளம்பரங்கள் வழங்கப்படும் . ஆனால் அதன் மூலம் வரும் வருவாயை YPP அங்கீகாரம் பெறாத அந்த சேனல் பெற முடியாது. எனவே ஜூன் மாதம் முதல் யூடியூபில் நீங்கள் பார்க்கும் அனைத்து வீடியோக்களிலும் விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துவதில் சந்தேகமே இல்லை.
ராயல்டி கொடுப்பனவுகள் மற்றும் வரி நிறுத்துதல் (Royalty payments and tax withholding)
இந்த புதிய திருத்த கொள்கை மூலம் இந்தியா போன்ற பிற நாடுகளை சேர்ந்த , பண உரிமை பெற்ற சேனல்கள் adsense portal மூலம் தங்களது வருமான வரி குறித்த தகவல்களை சேர்க்க வேண்டும். இது அமெரிக்காவின் வரிக்கண்ணோட்டத்தில் ராயல்டி என கருதப்படுகிறது.
வருகிற மே 31 ஆம் தேதிக்குள் வருமான வரியை பதிவு செய்ய வேண்டும், தவறினால் சோலோ கிரியேட்டரோ, கார்பரேட் கிரியேட்டரோ ! யாராக இருந்தாலும் தங்களின் வருமானத்தில் இருந்து 24 சதவீதம் வரியாக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் அடுத்தடுத்து தங்களின் படைப்புகள் தொடர்பான அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அதன் வரிசையில் தான் யூடியூப் குறித்த இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகி மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் குஷியாக இருக்கும் நிலையில் தற்போது, இந்த யூடியூப் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வருவாய் தொடர்பான அறிவிப்புகளும் இருப்பதால் பயனர்கள் குஷியாகியுள்ளனர்.