சீர்காழி அருகே கொரோனா தொற்று பரவலை தடுக்க  6 ஊராட்சிகளில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் மிக வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்து 131 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 722 பேர் வேதாரண்யம், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையம், வீட்டு தனிமைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மாவட்டத்தில்  இதுநாள் வரை 249 பலியாகியுள்ளனர்.



இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவை சேர்ந்த நல்லவிநாயகபுரம், எருக்கூர், உமையாள்பதி, அரசூர், திருமுல்லைவாசல், மாதிரவேலூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் கொரோனா தொற்றால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கக்கோரி சுகாதாரத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில்  இந்த 6 கிராமங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. மேலும் தொற்று பரவாமல் தடுப்புகளை கொண்டு அடைத்து எச்சரிக்கை பதாகைகள் வைக்க உத்தரவிடபட்டுள்ளது.



மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆறு ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றம் சார்பாக தினந்தோறும் கிருமி நாசினி தெளித்தல், குப்பைகள் எங்கும் தேங்காதவாறு அப்புறப்படுத்துதல், இந்த கிராமங்களில் 100 சதவீதம் முக கவசம் அணிவதை உறுதிபடுத்த ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ஊரடங்கு செயல்பாட்டை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 



சீர்காழி தாலுகாவில் தங்களுக்கு தாங்களாகவே கட்டுப்பாடுகளை விதித்து தனிமைப்படுத்திக் கொண்ட கிராமங்களின் மத்தியில், அதே தாலுகாவை சேர்ந்த 6 கிராமங்கள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது. கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாகவே சுய கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலை பின்பற்றி, முக கவசம் அணிந்து, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் மட்டுமே இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் காக்கப்படுவார்கள் என்பதே பலரது கருத்தாக உள்ளது.