இந்திய கிரிக்கெட் உலகில் ஆடவருக்கு நிகரான அளவிற்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பு இல்லை என்ற காலம் தற்போது சற்று மாற தொடங்கியுள்ளது. அதற்கு சான்று கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை பலர் கண்டு ரசித்தனர். இதில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டி வரை சென்று அசத்தியது. இந்திய மகளிர் அணிக்கு இத்தொடர் முழுவதும் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்தத் தொடர் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


எனினும் அதன்பின்னரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு போதிய வசதிகள் கிடைக்கவில்லை. குறிப்பாக பிசிசிஐ மகளிர் தினத்தன்று தான் மகளிர் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்று அறிவித்தது. இது மகளிர் தினத்திற்கான பிசிசிஐயின் உக்தி என்று பலரும் இதனை விமர்சித்தினர். ஏனென்றால் கடைசியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு 2021ஆம் ஆண்டில் தான் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது. இத்தனை ஆண்டு காலம் ஏன் மகளிர் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டிகள் நடத்தவில்லை என்ற கேள்வியை அப்போது ரசிகர்கள் எழுப்பினர்.


 






இந்நிலையில் நேற்று மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி மகளிர் வீராங்கனைகள் மூன்று கிரேடாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக கிரேடு ஏ வீராங்கனைகளுக்கு 50 லட்ச ரூபாயும், கிரேடு பி வீராங்கனைகளுக்கு 30 லட்ச ரூபாயும், கிரேடு சி வீராங்கனைகளுக்கு 10 லட்ச ரூபாயையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆடவர் கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தில் வெறும் 10% சதவிகிதம் கூட இல்லை. இதனால் இத்தகைய பாகுபாட்டை ரசிகர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பிசிசிஐயை சாடி வருகின்றனர். 


 






குறிப்பாக ஒருவர் ஆடவர் அணிக்கு சமமாக இல்லையென்றாலும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஏற்ற அளவு ஊதியத்தை பிசிசிஐ அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், "ஆடவர் வீரர்களுக்கு அதிகபட்சமாக 7கோடி ரூபாய். ஆனால் மகளிர் வீராங்கனைகளுக்கு 50 லட்சம் ரூபாய் தான். ஆண்களுக்கு சமமாக இல்லை என்றாலும் சற்று அதிகமான சம்பலத்தை வழங்க வேண்டும்"எனப் பதிவிட்டுள்ளார். 


 






மற்றொருவர் இரு அணிகளுக்கு இருக்கும் ஒப்பந்த ஊதியத்தை பதிவிட்டு, "இந்த இரண்டு ஊதியங்களும் வேறு கிரகத்தில் உள்ளது போல் இருக்கிறது. ஆடவர் அணிக்கு அளவிற்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை, லாபம் ஈட்டுவதும் இல்லை. அதற்காக இந்த மாதிரியான வித்தியாசத்தில் ஊதியமா? இதற்கு காரணம் வீராங்கனைகளா?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். 


மேலும் மற்றொருவர், "இந்திய ஆடவர் அணியில் கிரேடு சி யில் உள்ள வீரர் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆனால் இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச சம்பள கிரேடில் உள்ள மூன்று வீராங்கனைகள் அதில் பாதி அளவு தான் வாங்குகிறார்கள். இந்திய மகளிர் அணி அதிக லாபத்தை ஈட்டவில்லை என்றாலும் அதை விளம்பர படுத்தி லாபம் ஈட்ட வேண்டிய பொறுப்பு பிசிசிஐயிடம் தான் உள்ளது"எனத் தெரிவித்துள்ளார். 


 






அதேபோல் மற்றொருவர், "2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மகளிர் கிரிக்கெட் அணியின் ஊதியத்தை 125% அதிகரித்தது. மேலும் அங்கு குறைந்தபட்ச மற்றும் சராசரி ஊதியம் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டிற்கு சமமாக இருந்து வருகிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு 12 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது" எனப் பதிவிட்டுள்ளார். 






 






 






இப்படி மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணியின் ஊதிய வித்தியாசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.