2022ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.


யூடியூப்


வீடியோ செயலிகளில் முதன்மையானது யூடியூப். எந்த வீடியோவாக இருந்தாலும் யூடியூப்பில் சென்று தேடுவதுதான் முதல்வேலை. யார் வேண்டுமென்றாலும் தனிக் கணக்கு தொடர்ந்து யூடியூப்பில் வீடியோ பதிவேற்றலாம். அதனை மற்றவர்கள் பார்க்கும் பட்சத்தில் பார்க்கும் நபர்களுக்கு ஏற்ப ஒரு தொகை கொடுக்கப்படும். இதற்காக பலரும் பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் சில விதிமுறைகள் உண்டு.


யூடியூப் நிறுவனம் Community Guidelines என்ற பெயரில் சமூக வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் யூடியூப் தளத்தில் பதிவிடப்படும் வீடியோ, கமெண்ட், லைக்ஸ், முகப்புப் படம் முதலான அனைத்திற்கும் பொருந்தும். மேலும், இவை யூடியூப் தளத்தில் எந்த வகையான படைப்புகள் இடம்பெறக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. 



இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை யூடியூப் நிறுவனம் மனிதர்கள், செயற்கைத் தொழில்நுட்பம் ஆகிய இரு தரப்பின் மூலமாகவும் அமல்படுத்துகிறது. மேலும், இந்த நெறிமுறைகள் ஒரு சேனல் உரிமையாளரின் பின்னணி, அரசியல் நிலைப்பாடு, அதிகாரம் முதலான எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்தப்பட்டிருப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் மோசடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் யூடியூப் சேனல் நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


 இந்நிலையில் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.


காரணம் இதுதான்..


தங்களது கொள்கைகளை மீறியும், அரசின் அல்லது சமூகத்தின் விதிமுறைகளையும் மீறியதாகவும் இந்த அதிரடி நடவடிக்கையை யூடியூப் எடுத்துள்ளது. விதிமுறை மீறல் மட்டுமின்றி, பொய் விளம்பரங்கள், புதுப்புது ஸ்பேம் வீடியோக்களையும் களை எடுத்துள்ளது யூடியூப். அதன்படி, 38 லட்சம் வீடியோக்களையும் யூடியூப் அதிரடியாக நீக்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் 11 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன


Youtube Vanced..


முன்னதாக, யூடியூப் வருமானத்துக்கு ஆப்பு வைத்த Youtube Vanced என்ற  பக்கத்தை யூடியூப் அதிரடியாக நீக்கியது. அதாவது, வீடியோ நடுவே ஓடும் விளம்பரங்களை வைத்து யூடியூப் காசு பார்க்கிறது. உங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லையென்றாலும் அதற்காகவும் தனி ப்ரீமியம் பேக்கேஜ் முறையை கூகுள் வைத்துள்ளது. இப்படி ஒரு திட்டமிடலாக சென்றுகொண்டிருந்தாலும் சில ஆப்கள் யூடியூப்க்கு எதிராக செயல்பட்டு வந்தன. அப்படியான ஒரு செயலிதான் Youtube Vanced.  ப்ரீமியம் அக்கவுண்ட் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க இந்த ஆப் உதவியது. ஆனால் இந்த செயலியால் யூடியூப்பின் வருமானவே அடிவாங்கும் என்பதால் சட்டரீதியாக எச்சரிக்கை விடுத்தது கூகுள். அந்த எச்சரிக்கைக்கு Youtube Vanced பணிந்தது.