குற்றவாளிகளை காவல்துறையினர் துரத்தி பிடிக்கும் காட்சிகள் திரைப்படங்களில் சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி திரைப்படத்தில் அமைந்திருக்கும் காட்சியை போல் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றவாளியை 30 நிமிடங்களுக்குள் பெண் காவலர் ஒருவர் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள யமுனை ஆற்றின் பகுதியில் ரமேஷ் கர்காட்டி என்ற நபர் கடந்த 30ஆம் தேதி வாகனத்துடன் சென்றுள்ளார். ஆற்றில் தன்னுடைய காலை நனைக்க அவர் முடிவெடுத்துள்ளார். அப்போது தன்னுடைய மொபைல் போனை அவர் வண்டியில் வைத்துவிட்டு ஆற்றிக்கு அருகே போன போது அவருடைய வண்டியை ஒரு நபர் திருடியுள்ளார். அவர் ஓட்டி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அருகே உள்ள திமார்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அங்கு இந்தப் புகாரை விசாரிக்க பெண் எஸ் ஐ ப்ரீத்தி செய்னி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு குழுவை ஏற்படுத்தி இந்த வண்டியை தேட திட்டமிட்டதாக தெரிகிறது. அதற்காக அவர் அமைத்த குழுவினர் காவலர் உடை அணியாமல் சாதாரண உடையில் தேடி சென்றுள்ளனர். அந்த வண்டியிலிருந்த ரமேஷ் கர்காட்டியின் மொபைல் போன் லோகேஷனை வைத்து இவர் வண்டி இருக்கும் இடத்தை அறிந்துள்ளனர்.
அதன்பின்னர் அந்த இடத்திற்கு இவர்கள் ப்ரீத்தி செய்னி தலைமையில் விரைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பின் தொடர்வதை அறிந்த அந்த திருடன் வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் திரைப்பட பாணியில் இவரை சேஸ் செய்து பெண் காவலர் ப்ரீத்தி செய்னி பிடித்துள்ளார். அந்த திருடனிடம் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் ஹைதர் ராஜா என்பது தெரியவந்தது.
மேலும் அவர் இதுபோன்று தொடர்ந்து சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்கூட்டர்களை திருடி வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ஸ்கூட்டர்களை திருடி அதிலிருக்கும் பேட்டரிகளை எடுத்து விற்பதுடன் வாகனத்தின் சில பாகங்களையும் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு நடைபெற்ற 30 நிமிடங்களுக்குள் திருடனை தேடி பிடித்த பெண் எஸ் ஐ ப்ரீத்தி செய்னிக்கு பலரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்