காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்தி கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நேற்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்தச் சூழலில் இந்த கொரோனா தொற்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன் தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார். அதில், “எங்களுடைய தலவிஅர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் தென்பட்டது. அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 8ஆம் தேதி அமலாக்கத்துறை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்
வழக்கு:
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வருமான வரித்துறை சோதனை:
அதையடுத்து புகார் தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011-12 ஆம் ஆண்டில் வருமானம் குறைவாக காட்டப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. அதை எதிர்த்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய, வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்