ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு:


யூடியூபர்கள் மூலம் இந்தியாவின் ஜிடிபிக்கு கிடைக்கும் பங்களிப்பு மற்றும் அதன் மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அனைத்து அளவுகளிலும் 5,633 யூடியூப் கிரியேட்டர்கள், 4,021 பயனர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 523 வணிகங்களை ஆய்வு செய்து அதனடிப்படையிலான முடிவுகளை வெளியிட்டுள்ளது.


ரூ.10,000கோடி பங்களிப்பு:


அதன்படி, 2020 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளத்தில் உள்ள கிரியேட்டர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ. 6,800 கோடி பங்களித்துள்ளனர். அதோடு,  6, 83,900 வேலைகளுக்கு சமமான வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அதேபோன்று, கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ 10,000 கோடி பங்களித்துள்ள யூடியூப் கிரியேட்டர்கள்,  அதே காலகட்டத்தில் நாட்டில் 7, 50,000 க்கும் மேற்பட்ட முழுநேர வேலைக்கு சமமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்.


யூடியூப் தரப்பில் பெருமிதம்:


“இந்தியாவில் யூடியூப் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பின்னப்பட்டிருக்கிறது. யூடியூபின் ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் அமைப்பு, இந்தியாவின் கிரியேட்டிவிட்டி பொருளாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறது. நாடு முழுவதும் புதிய வேலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனவும், யூடியூப் பிரிவின் தெற்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் APAC வளர்ந்து வரும் சந்தைகளின்  இயக்குனர் அஜய் வித்யாசாகர் கூறியுள்ளார்.


யூடியூபில் புதிய அப்டேட்:


இத்தகைய சூழலில் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப யூடியூப் தளத்தில் பல்வேறு புதிய அப்டேட்களை வழங்க கூகுள்  நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு  மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவை யூடியூப் தளத்தில் தங்களது இலக்காக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடியூப் நிறுவனம் தனது தளத்தில்  கற்றல் மற்றும் சுகாதார உள்ளடக்கத்தை விரிவுபடுத்த இரண்டு புதிய அம்சங்களை வழங்க உள்ளது.  அதே நேரத்தில் டைப்பிங் மற்றும் வாய்ஸ் சர்ச்சிங் ஆகிய அம்சங்களுக்காக முக்கியமான அப்டேட்களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Aloud எனும் புதிய அம்சம் சோதனை முறையில் யூடியூப் தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், கூடுதல் செலவின்றி பல்வேறு பிராந்திய மொழிகளில் வீடியோக்களை மொழிபெயர்க்கவும், டப் செய்யவும் முடியும். தற்போதைய சூழலில் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் புதிய வசதி கிடைக்கிறது.


சுகாதார தகவல்களுக்கு முக்கியத்துவம்:


"முக்கியமான சுகாதாரத் தகவலை உண்மையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.  சுகாதாரப் பராமரிப்பில் நிபுணர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும், பலமொழி உள்ளடக்கத்தை திறமையாக உருவாக்குவதற்கும், பார்வையாளர்களை அளவில் சென்றடைவதற்கும் உதவும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கும் உறுதியாக இருப்பதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை உள்ளடக்கிய நம்பகமான தகவல்களை உருவாக்க, நாராயணா, மணிப்பால், மேதாந்தா மற்றும் ஷால்பி உள்ளிட்ட பல சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தகவலின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக, மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தகவல்கள் சரிபார்க்கப்படும் எனவும் யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.