2022-23ஆம் கல்வி ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநி்ல திட்ட இயக்குநராக இருந்த சுதன் ஐஏஎஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இதுகுறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


இந்தக் கல்வியாண்டிலிருந்து ஒரு மாதத்தில்‌ 15 நாட்கள்‌ பள்ளிக்கு வராத மாணவர்களை இடைநிற்கும்‌ வாய்ப்பு அதிகம்‌ உள்ளவர்களாகக் கருதி எமிஸ் தளத்தின்‌ வாயிலாக கண்டறியப்பட்டு, அவர்களை மீண்டும்‌ பள்ளியில்‌ சேர்ப்பதற்கான தலையீடுகள்‌ கள அளவில்‌ மிக சிறப்பாக தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்புக்‌ கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில்‌ கண்டறியப்படும்‌ குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ சிறப்புப்‌ பயிற்சி மையங்கள்‌ மூலம்‌ கல்வி வழங்கப்பட்டுவருகிறது. இது ஒரு தொடர்‌ பணியாகும்‌.


கணக்கெடுப்பிற்கான தரவுகள்‌ அனைத்தையும்‌ உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும்‌ வகையில்‌ ஒரு கைப்பேசி செயலி முதன்முறையாக வடிவமைக்கப்பட்டு அதன்‌ மூலம்‌ சென்ற கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதன்‌ வழியாக கிடைக்கப்பெற்ற அனுபவங்களிலிருந்து கைப்பேசி செயலியில்‌ சில மாற்றங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு 2022-23ஆம்‌ ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.


6-18 வயதுடைய பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனுடைய குழந்தைகளைக்‌ கண்டறியும்‌ கணக்கெடுப்பு பணி குடியிருப்புவாரியாக கீழ்க்காணும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி நடத்திட வேண்டும்‌.


1. தொடர்ந்து 30 வேலை நாட்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல்‌ இருந்தால்‌ அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகக்‌ கருத வேண்டும்‌. இத்துடன்‌ பள்ளிக்கு அடிக்கடி வராமல்‌ இருந்து இடைநிற்கும்‌ வாய்ப்பு அதிகம்‌ உள்ள குழந்தைகளும்‌ இதில்‌ அடங்குவர்‌.


2. பள்ளியே செல்லாத குழந்தைகள்‌ 


3. எட்டாம்‌ வகுப்பு முடிக்காமல்‌ இடைநிற்கும்‌ குழந்தைகள்‌


மேற்குறிப்பிட்ட அனைவரும்‌ "பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் ஆவர்‌. அரசாணைப்படி 6-14 வயதுடைய பள்ளி செல்லா/ இடைநின்றோரைக் கண்டறிந்து பள்ளிகளில்‌/ சிறப்பு பயிற்சி மையங்களில்‌ சேர்க்க வேண்டும்‌. இத்துடன்‌ கூடுதலாக 15-18 வயதுடைய குழந்தைகளில்‌ இடைநின்றோரை கண்டறிந்து பட்டியல்‌ தயாரித்து வைத்தல்‌ அவசியமாகும்‌.


அரசாணையில்‌  சூறிப்பிட்ட வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ கீழ்க்காணும்‌ வழிமுறைகளைப்‌ பின்பற்றி, 6 - 18 வயதுடைய பள்ளிச்‌ செல்லா/ இடைநின்ற குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.




கணக்கெடுப்பு பணி குறித்த செயல்திட்டம்‌:


1. 09.12.2022 முதல்‌ 14.12.2022 வரை - பள்ளி அளவில்‌ பொதுத்‌ தரவு தளத்தில்‌ இல்லாமல்‌ இதுநாள்‌ வரை பள்ளிக்கு வராத ஒன்று முதல்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களின்  பெயர்‌ பட்டியலை சேகரிக்க வேண்டும்‌. பள்ளி அளவில்‌ சேகரிக்கப்பட்ட பட்டியலை வைத்துக்‌ கொண்டு கள ஆய்வின்போது உண்மை நிலவரத்தைக்‌ கண்டறிந்து அக்குழந்தைகளைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


2.முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌/ உதவித்‌ திட்ட அலுவலர்‌ / உதவி மாவட்டத்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ தலைமையில்‌ கணக்கெடுப்பு குறித்து கலந்தாலோசனை 14.12.2022 அன்று நடத்துதல்‌ வேண்டும்‌.


3. மாவட்ட ஆட்சியர்‌/ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ தலைமையில்‌ கலந்தாலோசனை - 15.12.2022 (அ) 16.12.2022 நடத்துதல்‌ வேண்டும்‌.


4. பள்ளி சார்ந்த குடியிருப்புப்‌ பகுதிகளை பங்கீடு செய்தல்‌ - மாவட்ட அளவில்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌/ உதவித்‌ திட்ட அலுவலர்‌/ மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ (06௦) கலந்தாலோசனை (16.12.2022 (அ) 17.12.2022) நடத்துதல்‌ வேண்டும்‌.


5. ஒன்றிய அல்லது வட்டார் அளவில்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ / மேற்பார்வையாளர்‌ தலைமையில்‌ கலந்தாலோசனை 19.12.2022 அன்று நடத்துதல்‌ வேண்டும்‌.


6. இம்மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்களுடன்‌ கணக்கெடுப்பு குறித்து கலந்தாலோசனை நடத்துதல்‌ வேண்டும்‌.


7. ஊடகங்களில்‌ கணக்கெடுப்பு குறித்துக்‌ கட்டாயம்‌ விளம்பரப்படுத்துதல்‌ வேண்டும்‌. உள்ளூர்‌ தொலைக்காட்சி சேனல்கள்‌, ரேடியோ, திரையரங்குகளில்‌ விளம்பரம்‌, பத்திரிக்கைகளில்‌ செய்தி போன்றவை மூலமாக விளம்பரம்‌ செய்ய வேண்டும்‌. மேலும்‌, கிராம அளவில்‌ கிராம நிர்வாக அலுவலர்‌ மூலமாக தெருக்களில் இடைநின்ற குழந்தைகளுக்கு அரசு வழங்கும்‌ சலுகைகளைப்‌ பற்றி அறிவிப்பு செய்யவேண்டும்‌. அப்பகுதியில்‌ பள்ளிக்கு செல்லாத குழந்தைகள்‌ இருந்தால்‌ உடனடியாக பள்ளிகளில்‌ சேர்க்க வலியுறுத்த வேண்டும்‌.


8. ஊராட்சி அலுவலக அறிவிப்புப்‌ பலகை மற்றும்‌ நியாய விலைக்‌ கடைகளில்‌ இது சார்ந்து விளம்பரம்‌ செய்ய வேண்டும்‌. பெருநகராட்சிகளில்‌ சம்பந்தப்பட்ட ஆணையர்கள்‌ / மண்டல அலுவலர்கள்‌ மூலமாக பொது மக்களுக்கு அறிவிப்பு வழங்கும்படி தெரிவிக்கலாம்‌. - மேற்குறிப்பிட்ட அனைத்துச்‌ செயல்பாடுகளையும்‌ முடித்த பிறகு குடியிருப்பு வாரியாக கணக்கெடுப்பு தொடங்குதல்‌ வேண்டும்‌.


9. மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ மாற்றம்‌ தேவையிருப்பின்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ மாற்றம்‌ செய்து கொள்ளலாம்‌.


10. எமிஸ் தளத்தில்‌‌ உள்ள குழந்தைகளின்‌ உண்மை நிலவரத்தைக்‌ கண்டறிந்து, அதில்‌ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ விவரங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு பெயர்பட்டியல்‌ அனுப்பி அக்குழந்தைகள்‌ தொடர்ந்து பயின்று வருகிறார்களா என்பதை அறிய வேண்டும்‌. இடைநின்ற மாணவர்கள்‌ கருப்பின்‌ அவர்களை உடனடியாக பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌.


11. மேற்குறிப்பிட்ட அனைத்துச்‌ செயல்பாடுகளையும்‌ முடித்த பிறகு குடியிருப்பு வாரியாக கணக்கெடுப்பு பணியினை தொடங்குதல்‌ வேண்டும்‌. இதற்காக உருவாக்கப்பட்ட செயலி மூலம்‌ இப்பணியினை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌.


12. கணக்கெடுப்பின்‌ போது கோவிட்‌-19 பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களில்‌ ஒருவரையோ அல்லது இருவரையும்‌ இழந்த மாணாக்கர்களின்‌ விவரங்களையும்‌ சேகரிக்க வேண்டும்‌.


13. கணக்கெடுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும்‌ முறையாக ஆவணப்படுத்த வேண்டும்‌.


14. கண்டறியப்படும்‌ பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌/ மாற்றுத்‌ திறனுடைய குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில்‌ சேர்க்கப்பட வேண்டும்‌.


15. சிறப்பு பயிற்சி தேவைப்படும்‌ குழந்தைகளை இணைப்பு சிறப்புப்‌ பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


16. பள்ளிகளில்‌ சேர்க்கப்பட்‌ டவுடன்‌ எமிஸ்-இல்‌ மாணாக்கர்களின்‌ விவரங்களை பதிவு செய்ய வேண்டும்‌.


17. கணக்கெடுப்பு களப்பணி 19.12.2022 முதல்‌ 11.01.2023 வரை நடைபெற வேண்டும்.