இந்திய வருமான வரிச் சட்டங்களுக்கு உட்பட்டு, பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்காததால் சியோமி மற்றும் ஆப்போ செல்போன் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியன்று நாடு முழுவதும் ஐடி துறை சார்பில் பல்வேறு இடங்களிலும் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகள் குறிப்பாக அந்நிய நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் அவற்றைச் சார்ந்த நபர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இந்தச் சோதனை கர்நாடகா, தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களில் நடைபெற்றது.


இது தொடர்பாக மத்திய நேரடி வரி விதிப்பித் துறை கடந்த வெள்ளியன்று அறிக்கை வெளியிட்டது. அதில், நாடு முழுவதும், அந்நிய நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் அவற்றைச் சார்ந்த நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களின் விரிவான சோதனை நடத்தப்பட்டது. இதில் இரண்டு பெரிய நிறுவனங்களான ஆப்போ மற்றும் சியோமியும் வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் ராயல்டி பெற்றுள்ளது. ராயல்டி வகையறாவாக ரூ.5,500 கோடி சம்பாதித்துள்ளது.


ஆனால் இவ்வாறாக ராயல்டி வகையில் பெறப்படும் தொகைக்கான கணக்குகள் சரிவர இல்லை. இதன் மூலம் இந்த இரண்டு நிறுவனங்களும் வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் சார்பு நிறுவனங்களுடனான பணப் பரிவர்த்தனைகள் குறித்து கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து மீறியுள்ளது உறுதியாகியுள்ளது. இத்தகைய விதிமீறலுக்கு வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் ரூ.1000 கோடி அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


மேலும் ஆழமான விசாரணை நடத்தியதில், மொபைல் ஃபோன் தயாரிப்புக்கான உதிரி பாகங்களை வாங்குவதில் பின்பற்ற நடைமுறை குறித்தும் தெரியவந்துள்ளது. இந்திய நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி வந்ததற்கான ஆவணங்கள் சந்தேகம் அளிப்பதாக உள்ளது. இந்த முதலீட்டை கடனாகப் பெற்றதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தத் தொகை ரூ.5000 கோடியாகக் காட்டப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக சியோமி, ஓப்போ நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கூட இதுவரை எந்தப் பதிலும் இல்லை என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. 


டிசம்பர் 21 ஆம் தேதி இன்னொரு மொபைல் நிறுவனமும் ரெய்டுக்குள்ளானது. ஆனால் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை வருமான வரித்துறை வெளியிடவில்லை. 


இந்திய மொபைல் சந்தையில் சியோமி மற்றும் ஓப்போ நிறுவனங்களின் ஃபோன்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இந்தியச் சந்தையில் தனக்கென தனியிடம் கொண்ட இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.