சமூக வலைதளங்கள் இன்று வெறும் பொழுதுபோக்கல்ல. அரசியல், வியாபாரம் என அது ஒரு தனி மீடியமாகவே செயல்படுகிறது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சோஷியல் மீடியாவும், ஓடிடி தளங்களும் இன்றைய டிஜிட்டல்  உலகை ஆள்கின்றன. தேர்தல் பிரசாரம், போராட்டக்களம் என அனைத்து தரப்பிலும் தன் பங்கை பதிவு செய்கிறது சோஷியல் மீடியா. டிஜிட்டல்  உலகம் சில நேரம் மக்களுக்கும், அரசுக்கும் எதிராகவும் திரும்புகின்றன. எதுவாயினும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதே நல்லது என யோசித்த மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் சமூக வலைதளங்களுக்கு, ஓடிடி தளங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை அறிவித்தது.




இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துகளை முதலில் பதிவிட்டது யார் என்பதை அறியும் வசதி வேண்டும். அப்படி புகார் கொடுக்கப்படும்பட்சத்தில் அதனை 36 மணி நேரத்துக்குள் நீக்க செய்ய வேண்டும், புகாரை விசாரிக்க ஒரு தலைமை அதிகாரி உள்பட 3 அதிகாரிகளை சோஷியல் மீடியா நிறுவனங்கள் நியமிக்க வேண்டும், அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும், நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கைகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய விதிமுறைகள் கொடுக்கப்பட்டன. 


மேலும் குறிப்பிட்ட மத்திய அரசு, ''புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படி,  இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக ஊடக தளங்கள் சாதாரண பயனர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன, ஆனால் அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு  எதிராக அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்'' என விதிமுறைகளை விளக்கியது. இந்த விதிமுறைகளால் கருத்து சுதந்திரம் நசுக்கப்படலாம் என்றும் விமர்சனங்கள் கிளம்பிய அதே வேளையில் ஒவ்வொரு நாட்டுக்கும் பாதுகாப்பு தொடர்பான சில விதிகள் உள்ளன அதன்படியே இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கூறப்பட்டது. 




இந்த விதிமுறைகள் பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டாலும் 3 மாதகாலம் அவகாசம் அளித்தது மத்திய அரசு. அதாவது இந்திய அரசின் விதிமுறைகளை மே 25க்குள் சோஷியல்மீடியா நிறுவனங்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு கொடுத்துள்ள கெடு இன்று முடிவடைகிறது. வெளியான தகவலின்படி, மத்திய அரசு தெரிவித்த பல  விதிமுறைகளுக்கு சோஷியல் மீடியா நிறுவனங்கள் இதுவரை ஆயத்தமாகவில்லை என தெரிகிறது. மத்திய அரசு குறிப்பிட்டது போல புகார்களை  விசாரிக்க இதுவரை எந்த அதிகாரிகள் குழுவையும் சோஷியல் மீடியா நிறுவனங்கள் அமைக்கவில்லை. சில நிறுவனங்கள் தலைமை இடமான அமெரிக்காவில் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும்,  6 மாதகாலம் அவகாசம் வேண்டுமென அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் இயங்கும் நிறுவனத்திற்கு இந்திய அரசு கொடுத்த சில விதிமுறைகளை கடைபிடிக்க அமெரிக்காவில்  இருந்து அனுமதி பெற வேண்டுமா என மத்திய அரசும் சீறுவதாக கூறப்படுகிறது. 




சோஷியல் மீடியாவில் ஒரு பிரச்னை என்றால் பயனர்கள் யாரிடம் புகார் அளிக்க வேண்டும், அந்த பிரச்னை எப்படி தீர்க்கப்படும் என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில்  மத்திய அரசு கொடுத்துள்ள கெடுவும் முடிவடைந்துள்ளது. விதிகளை கடைபிடிக்காத நிலையில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு இந்திய அரசு இரு தினங்களில் தடை விதிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இல்லையென்றால், மேலும் ஒரு சில மாதங்கள் அவகாசம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. சோஷியல் மீடியா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




>> எச்சரித்த மத்திய அரசு : ப்ரைவசி பாலிசியை திரும்பப்பெறுமா Whatsapp?