இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சமூக வலைத்தளங்களில் அவ்வளவு ஆக்டிவாக இருக்க மாட்டார். எனினும் அவர் தொடர்பான பதிவு சமூக வலைத்தளத்தில் வந்தால் ரசிகர்கள் அதை வைரலாக்கி விடுவார்கள். அந்தவகையில் சமீபத்தில் தோனியின் புதிய லுக் படம் ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தத்திற்கு பின் வெளியாகும் படம் என்பதால் இது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


 






கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி ராஞ்சியிலுள்ள தனது பண்ணை வீட்டில் தனது செல்ல பிராணிகளுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அவரிடம் நான்கு நாய்கள், 2 குதிரைகள் உள்ளிட்ட பல செல்ல பிராணிகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் தனது மகளுடன் வீட்டை சுற்றி வரும் வீடியோ ஒன்று வைரலானது. அந்தவகையில் தற்போது அவர் மீண்டும் தனது பண்ணை வீட்டில் தன்னுடைய நாயுடன் இருக்கும் புதிய படம் வெளியாகியுள்ளது. 


 






 


இந்தப் படம் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பலர் நீண்ட நாட்களுக்கு பிறகு தல தரிசனம் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் தோனி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித் எப்போதும் அந்த லுக்கில் இருப்பார். தற்போது அவருக்கு போட்டியாக கிரிக்கெட் தல தோனியும் அதே லுக்கில் உள்ளார். இதனால் இது தோனி மற்றும் அஜித் ரசிகர்களுடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தலயை பாலோ செய்யும் தல என ஒரு தரப்பு இதை கொண்டாடியும் வருகிறது. 


முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது சென்னை அணியின் அனைத்து வீரர்களும் வீட்டிற்கு சென்ற பிறகு தான், நான் ராஞ்சிக்கு செல்வேன் என்று தோனி கூறியிருந்தார். அதன்படி அனைவரும் சென்ற பிறகு அவர் தனது ராஞ்சி வீட்டிற்கு சென்றார். அதற்கு பின் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.