தனிமனித ரகசியம் காக்கும் விஷயம் என்பதால் பிரைவசி பாலிசியை திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டி வாட்ஸ் அப் தரப்பிற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் வாட்ஸ் அப் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித முறையான பதிலும் வரவில்லை.




மக்களின் பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு பிறகும் திட்டமிட்டபடி, கடந்த மே 15-ஆம் தேதியில் இருந்து வாட்ஸ் அப் புதிய பிரைவசி பாலிசி தற்போது அமலில் இருக்கிறது. இதனை பயனர்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் வாட்ஸ் அப் கணக்கு படிப்படியாக முடக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தனிமனித ரகசியம் காக்கும் விஷயம் என்பதால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்த மக்கள் இதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனையடுத்து தான் கணக்குள் எல்லாம் முடக்கப்படாது எனவும், பயனர்களுக்கு புதிய தனியுரிமைக்கொள்கை குறித்து விளக்குவோம் என வாட்ஸ் அப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுவருகிறது.




புதிய தனியுரிமைக்கொள்கையைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு வாட்ஸ் அப்பிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. இக்கடித்தத்தில் பிரைவசி பாலிசி என்பது பயனர்களின் தனிப்பட்ட உரிமை, தகவல்கள் மற்றும் பயனர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காதது போல் தெரிகிறது. எனவே இதுக்குறித்து  7 நாட்களுக்குள் வாட்ஸ்-அப் நிறுவனம் உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.




ஆனால் மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸை  வாட்ஸ்-அப் நிறுவனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இதுவரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப்பின் மீது மற்றொரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. அதில் ஐரோப்பாவில் General Data Protection Regulation-ன் கீழ் பயனர்கள் தங்களுக்கு புதிய தனியுரிமைக் கொள்கைகள் வேண்டாம் என்று மறுப்பதற்கான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது வாட்ஸ்அப். ஆனாால் இந்தியாவில் மட்டும் பிரைவசி பாலிசியை அமலுக்கு கொண்டு வர ஏன் வாட்ஸ் அப் கட்டாயப்படுத்துகிறது எனவும் இரு நாட்டு பயனர்களுக்கிடையே பாகுபாடு காட்டுகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.  

எனவெ இந்த புதிய பிரைவசி பாலிசியை திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூறி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடிதம் அனுப்புவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் கடந்த ஜனவரி மாதம் புதிய தனியுரிமைத் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூறி கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்கும் வாட்ஸ்-அப்பின் தரப்பில் இருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தான் வாட்ஸ்-அப்பின் இந்த புதிய பிரைவசி பாலிசி  இந்திய தொழில்நுட்பக்கொள்கைக்கு எதிராக உள்ளது என தெரிவித்த மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்  இதனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உரிய பதிலளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.