எலான் மஸ்க் ட்விட்டரில் உயர்மட்ட அளவிலான மாற்றங்களைச் செய்துவரும் நிலையில், அவர் தன்னைச் சுற்றி ஆலோசகர்களைப் புதுப்பித்து வருகிறார். இவர்களில் வென்ச்சுர் கேப்பிட்டலிஸ்ட் டேவிட் சாக்ஸ் மற்றும் சில நெருங்கிய வணிக கூட்டாளர்களுடன், இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன்(Sriram Krishnan) என்பவரும் இணைந்துள்ளார்.
முன்பு ட்விட்டரில் பணிபுரிந்த கிருஷ்ணன், A16z என்றும் அழைக்கப்படும் சிலிக்கான் வேலி முதலீட்டு நிறுவனமான அண்ட்ரீசன் ஹோரோவிட்ஸில் பங்குதாரராக உள்ளார், இந்த நிறுவனம் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் முதலீடு செய்தது.
தி நியூயார்க் டைம்ஸின் செய்தியின்படி, கிருஷ்ணனும் மற்ற ஆலோசகர்களும் அக்டோபர் 30 அதாவது எலான் ட்விட்டரை வாங்குவதற்கு முதல் நாள் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் எவ்வித இடர்பாடுகளும் நேராமல் பார்த்துக்கொண்டதாகவும். அதே நேரத்தில் மஸ்க் நியூயார்க்கிற்கு 31 அக்டோபர் அன்று விரைந்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே கிருஷ்ணன் அலுவலகத்தின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டார், மேலும் அவர் தற்காலிகமாக மஸ்குக்கு உதவி செய்வதாக கூறினார்.
கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி இருவரும் சென்னையில் பிறந்து நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள். 2003ம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்கும் போது, கல்லூரியில் இருவரும் சந்தித்துள்ளனர். இருவரும் தற்போது சான் பிரான்ஸிஸ்கோவின் நோயே பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். தம்பதி இருவருக்கும் 2 வயது மகள் உள்ளார். தற்போது சியாட்டலில் உள்ள பாலோ அல்டோவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் ட்விட்டர் தவிர, யாஹூ, ஃபேஸ்புக் மற்றும் ஸ்நாப் ஆகியவற்றில் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமூக ஆடியோ செயலியான கிளப்ஹவுஸில் முக்கிய முதலீட்டாளரான அண்ட்ரீசன் ஹோரோவிட்சில் 2021-ஆம் ஆண்டில் அவர் இணைந்தார். அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி நெட்ப்ளிக்ஸ் மற்றும் பேஸ்புக்கில் பணிபுரிந்துள்ளார். மேலும் ட்ரூ அண்ட் கோ மற்றும் லூமாய்ட் போன்ற ஸ்டார்ட் அப்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிப்ரவரி 2021 இல், க்ளப் ஹவுஸில் கிருஷ்ணன் மற்றும் ராமமூர்த்தியின் பிரபல நிகழ்ச்சியான ‘தி குட் டைம்ஸ் ஷோ’வில் மஸ்க் பங்கேற்றுள்ளார். கலிபோர்னியாவின் ஹாவ்தோர்னில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்திற்குச் சென்றிருந்தபோது அவர்கள் முன்னதாக அவரைச் சந்தித்துள்ளனர். மஸ்க் தவிர, இந்த ஜோடி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மறைந்த ஆடை வடிவமைப்பாளர் விர்ஜில் அப்லோ ஆகியோரையும் தங்கள் நிகழ்ச்சியில் பேச வைத்துள்ளனர்.