வாட்ஸ்-அப் செயலியில் தற்போது ஒரே நேரத்தில் 30-க்கும் அதிகமான புகைப்படங்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.


வாட்ஸ்-அப் செயலி:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி நிறுவனங்களிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அந்த செயலியில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப்  தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான், மேலும் ஒரு புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளது.


போட்டோக்களை பகிர்வதில் சிக்கல்:


குறுந்தகவல் அனுப்பும் செயலியாக அறிமுகமான வாட்ஸ்-அப், அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் தற்போது புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம், அதிகபட்சமாக ஒரு நேரத்தில் 30 புகைப்படங்களை மட்டுமே பகிர அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனால், 30-க்கும் அதிகமான புகைப்படங்களை அனுப்ப முயற்சிப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக மொத்தமாக உள்ள புகைப்படங்களில் எதுவரை பகிர்ந்து இருக்கிறோம் என்பதை, நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அனுப்பும்போது அதற்கடுத்த புகைப்படங்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டி இருந்தது. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.


100 புகைப்படங்களை பகிரலாம்:


புதிய அப்டேட்டின்படி, வாட்ஸ்-அப் செயலியில் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்ப முடியும். இதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேர்த்து 100 எண்ணிக்கை வரையிலான ஆவணங்களை ஒரே நேரத்தில் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு முறையும் 30 புகைப்படங்களை தேர்வு செய்து மீண்டும், மீண்டும் பகிரும் பணி மிச்சமாகும் என, மெட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கெப்ட் மெசேஜஸ் வசதி (Kept Messages feature)


வாட்ஸ்-அப் செயலியில் தேவையற்ற குறுந்தகவல்கள் தேங்கி இருப்பதை தவிர்க்க, டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,  குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு குறுந்தகவல்கள் தாமாகவே டெலிட் ஆகிவிடும். இந்நிலையில்,  கெப்ட் மெசேஜ் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்ட்ராய்ட்-இன் Android 2.23.4.10 வர்ஷன் அப்டேட்டில் வாட்ஸ்-அப் பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இந்த வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த புதிய அப்டேட் மூலம், வாட்ஸ்-அப் குழுவில் டிஸ்ஸப்பியரிங் மேசேஜ் மோட் செயல்பாட்டில் இருந்தாலும், கெப்ட் மெசேஜ் -ஐ எனேபிள் செய்யும்போது அதிலுள்ள மெசேஜ் காணாமல் போகாது. குழுவின் பெயர் மீது தொட்டால் கெப்ட் மெசேஜ் ஆப்ஷன் தோன்றும், அதன் கீழ் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து மெசேஜ்களையும் காணலாம்.