தஞ்சாவூர்: என்ன கொடுமைங்க இது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் - அம்மாபேட்டை தேசிய நெடுஞ்சாலைதான் இவ்வாறு மதுபிரியர்களால் அவதிக்கு உள்ளாகி வருகிறது என்றால் மிகையில்லை. எனவே இதுகுறித்து உடன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் - அம்மாபேட்டை புதிய தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமத்தில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த சாலையில் மின்விளக்கு இல்லாத காரணத்தினால் சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. மேலும் சாலையிலேயே பாட்டிலை உடைத்து விட்டும் செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சாலையின் இருபுறமும் விவசாய நிலம் என்பதால் அங்கு அறுவடை செய்யப்படும் நெல்களை சில நேரங்களில் சாலையில் உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் அந்த நெல்களை கருப்பு நிற தார்பாய்கள் போட்டு மூடி வைப்பதால் இருளில் தெரியாமல் போகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் வருவோர் அந்த நெல் குவியல் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

இதுகுறித்து பாபநாசம் டிஎஸ்பி பூரணி தலைமையில் போலீசாரை அந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற குற்றச்சன்பங்களை தடுக்கலாம். சாலையில் அமர்ந்து மது அருந்துவோர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கையில், மது பிரியர்கள் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும் இந்த நெடுஞ்சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வருபவர்களிடம் பிரச்னை செய்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இப்பகுதி வழியாக குடும்பத்தினருடன் செல்பவர்களுக்கு இந்த மது பிரியர்களின் செயல்கள் முகம் சுளிக்க செய்கிறது. சில நேரங்களில் மது போதை அதிகமாக சாலையிலேயே போதையில் உருள்கின்றனர். இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் மது பிரியர்கள் உடைத்து போடும் பாட்டில் சில்லில் சைக்கிள் டயர் பஞ்சர் ஆவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே இதுகுறித்து உடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.