கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் 2023-24ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவனர்கள், அரசு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு இத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 


இந்த கருத்துக்கள் முதலமைச்சரின் அறிவுரையைப் பெற்று, நிதிநிலை அறிக்கையில் அமல்படுத்த உதவியாக இருக்கும். மக்கள் நல்வாழ்வுத் துறையில் இது முன்மாதிரியான முயற்சி.  இந்தக் கூட்டத்தில் குறிப்பாக புற்றுநோய், காசநோய், தொழுநோய், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகின்ற நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டது. இவைகளுக்கான தீர்வாகவும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆராயப்பட்டது. இந்த கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. மக்கள் நல்வாழ்வு துறையில் ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் நல்வாழ்வு துறையில் மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. 708 புதிய மருத்துவமனைகள் அமையும் என முதலமைச்சர் அறிவித்ததில், 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.




கோவை அரசு மருத்துவமனையில் கூலி உயர்வு வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு, “அவர்கள் ஒப்பந்த பணியாளர்கள் என்பதால் அவர்கள் நேரடியாக அரசு சம்பளத்தை பெறுபவர்கள் அல்ல. எனவே அவர்களின் நிறுவனத்தினர் அரசு நிர்ணயத்துள்ள தொகையையும், சலுகைகளையும் வழங்க வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நியாயமான சலுகைகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “தற்போது 750 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக வாங்கப்பட்டுள்ளது. காச நோயை கண்டறிவதற்காக 24 டிஜிட்டல் சேவை உள்ள வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அது பயன்பாட்டுக்கு வர உள்ளது. கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை கோவாக்சின் கையிருப்பில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் என பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டாம். அவ்வாறு எங்கேனும் நிகழ்வது தெரிந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். 


மருத்துவக் கழிவுகள் கண்ட இடங்களில் கொட்டுவது ஏற்படுவது அல்ல. மருத்துவக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளர்களுக்காக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த ஆண்டு பரிசீலிப்படும். 4000 செவிலியர்கள் பணி நியமனங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்த வரை விமான நிலையங்களில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.