உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் பயன்படுத்தப்படும் ஆப்பாக வாட்ஸ் அப், தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்குவதில் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் வாட்ஸ் அப்பை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


வாட்ஸ்-அப்  வாயிலாக தவறான செய்திகளை அனுப்புவது, ஸ்பாம் செய்வது, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அந்நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களது கணக்கை முடக்கவோ அல்லது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது இந்நிலையில் விரைவில் பல சூப்பர் டூப்பர் அப்டேட்களை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. அவை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.






Past group participants: 


இதுவரை வாட்ஸ் அப் குரூபில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று காண முடியும். இந்நிலையில், விரைவில், வாட்ஸ் அப் குழுவிலிருந்து யாராவது விலகி இருந்தார் அவர்கள் பற்றிய தகவலை 60 நாட்களுக்கு பெறும் வகையில் புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன்மூலம், வாட்ஸ் அப் குழுவில் இருந்து யாரெல்லாம் லெஃப்ட் ஆகியிருந்தால் அவர்களை கண்டுகொள்ள முடியும்.


Online:


தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும். இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது. ஆன்லைனைப் பார்த்து நமக்கு சாட் செய்வார்கள். அந்த சிக்கலை சரிசெய்ய தற்போது அப்டேட் கொண்டு வருகிறது வாட்ஸ் அப். அதன்படி ஆன்லைன் என்பதை சிலருக்கோ  அல்லது யாருக்குமே காட்டாமல் இருக்கலாம் என்றும் அந்த அப்டேட்டுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல நாம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை வேண்டுமானால் தற்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் மட்டுமே செய்ய முடியும். அதில் ஒரு அப்டேட்டாக, அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதியும் விரைவில் வரும் எனத் தெரிகிறது. இதெல்லாம் தற்போது சோதனை முறையில் இருப்பதால் விரைவில் பீட்டா வெர்ஷனுக்கு கொண்டு வரப்பட்டு அது வரவேற்பை பெற்றால்தான் அனைவருக்கும் கிடைக்கும்.






வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ் மற்றும் ரியாக்‌ஷன்:


ஏற்கனவே புகைப்படம், வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ள நிலையில் குரல்பதிவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஸ்டேட்டஸ்-ற்கு பெயர் 'வாய்ஸ் ஸ்டேட்டஸ்' என்று வைத்துள்ளார்கள். மற்றபடி எழுத்து, புகைப்படம், வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பது போலவே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனாகவே, நாம் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காட்டுவது போன்ற வசதியுடன் வருகிறது. வாய்ஸ் நோட் விரும்பிகளின் இடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த அப்டேட் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.


இதோடு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியில் இரண்டிலும் உள்ளது போலவே, ஸ்டேடஸில் அதற்கு ரியாக்ட் செய்யும் எமோஜிகள் உடன் அப்டேட் வழங்கப்பட உள்ளது.


டெலிட் செய்யலாம்..  


வாட்ஸ் அப் தொடர்பான அப்டேட் சோதனைகளை வெளியிடும் WABetaInfoன் தகவலின்படி வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் இனி குரூப்பில் பதிவிடப்படும் எந்த ஒரு மெசேஜையும் டெலிட் செய்ய முடியும். குறிப்பிட்ட குரூப்பில் யார் மெசேஜ் செய்திருந்தாலும் அதனை லாங் ப்ரஸ் செய்து குரூப் அட்மின் டெலிட் செய்யலாம். குரூப்பில் தேவையற்ற விவாத பேச்சுகளை தவிர்க்கும் விதத்தில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் இருந்தால் அந்த குரூப்பில் இருக்கும் யாராக இருந்தாலும் உங்கள் போன் நம்பரை தற்போது எடுத்துக்கொள்ள முடியும். தற்போது பலரும் குரூப்பில் இருந்து உங்கள் நம்பரை எடுத்தேன் எனக் கூறி வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வார்கள். அந்த அனுபவம்  உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்த பிரச்னைக்கு தற்போது முடிவுகட்டவுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். அதற்கான அப்டேட்டை விரைவில் கொண்டுவரவுள்ளது. அதாவது வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தாலும் உங்கள் மொபைல் எண்ணை மறைத்து வைக்கலாம்.






 


குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:


 ஏற்கனவே வாட்ஸ்அப் குரூப்களில் அதிகப்பட்சமாக 256 உறுப்பினர்களை நேரடியாகவும், லிங்க் மூலமும் இணைக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இந்த வசதி மாற்றப்பட்டு 512 ஆக இரட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இதை அதிகரிக்கவும் வாட்ஸ் அப் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






மேலும் வாட்ஸ் அப்பில் தகவல்களை டெலிட் செய்ததும் அதனை மீட்டெடுக்க முடியாத நிலை இருந்தது. அது அப்டேட் செய்யப்பட்டு undo என்ற ஆப்ஷன் ஸ்கீரினின் கீழ் பகுதியில் சில வினாடிகள் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதை 15 நிமிடங்களுக்கு மேல் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. 


வாட்சப் சாட் பட்டியல் வழியாகவே நேரடியாக ஒருவருடைய வாட்சப் ஸ்டேடஸைப் பார்க்கும் அப்டேட்டை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போலவே வாட்சப்பிலும் ஸ்டேட்டஸைப் பார்க்கலாம். மேலும், வாட்ஸ் அப் அக்கவுண்டை ஒன்றிற்கும் மேற்பட்ட டிவைஸ்களில் பயன்படுத்தும் வகையில் அப்டேட் வருகிறது.